Jun 1, 2015

ரசாயன உரம் போட்டுத் தாக்குறீங்களே!'தமிழக அரசுக்கு கேரளா கடிதம்


நாகர்கோவில்:'தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ரசாயன உரம் கலந்து காய்கறி பயிரிடும் முறையை மாற்ற வேண்டும்' என கேரள அரசு சார்பில் தமிழக வேளாண் உற்பத்தித்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் ரசாயன உரம் மூலம் அதிக விஷத்தன்மை இருப்பதாக, கேரள அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் கேரள உணவு பாதுகாப்புத்துறை இணை ஆணையர் அனில்குமார், துணை ஆணையர் சிவகுமார், தொழில்நுட்ட அதிகாரி கோபகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரையில் ஆய்வு நடத்தினர்.
கேரளாவுக்கு காய்கறி அனுப்பும் திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, நீலகிரி போன்ற இடங்களில் ஆய்வு நடந்தது.இக்குழு அளித்த அறிக்கையில், 'தமிழக காய்கறிகளில் அதிக விஷத்தன்மை இருக்கிறது; இது புற்று நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும்' என கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டியின் அறிவுரைப்படி, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் டி.வி.அனுபமா, தமிழக வேளாண் உற்பத்தித் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'தமிழகத்தில் காய்கறி உற்பத்தி முறையை மாற்றாத பட்சத்தில் அது இரு மாநில மக்களையும் பாதிக்கும். பண்ணை விவசாயத்தில் வழக்கத்தை விட ௧௦ மடங்கு ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி பயிரிட 12 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
செவ்வாழை பழத்தில் 'பியூரிடான்' பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட், கேரட் , உருளைக் கிழங்கில் 'போரைட்' என்ற கொடுமையான விஷ மருந்து கலந்த மண் பயன்படுத்தப்படுகிறது.
காலிபிளவர், வழுதலைங்காய் பயிரிடும் போதும், 'பேக்கிங்' செய்யும் போதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கின்றனர். இவற்றை தடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment