Sep 25, 2014

வீட்டிலேயே பான் பராக், குட்கா தயாரிப்பு குற்றவாளியை தப்பவிட்ட அதிகாரிகள் நடு ரோட்டில் வாக்குவாதம்


சென்னை,செப்.25:
சென்னையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான் பராக், குட்கா போன்றவற்றை சமூக ஆர்வலர் ஒருவர் பறிமுதல் செய்து, அதை தயாரித்த வாலிபரை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ஆனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தப்பிக்கவிட்டதால் நடு ரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா, மாவா, ஹன்ஸ் போன்றவற்றை தயாரித்தாலோ, சேமித்து வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ரகசியமாக சென்னையில் பான் பராக், குட்கா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில இடங்களில் சோதனை நடத்தி கொஞ்சம் பொருட்களை பறிமுதல் செய்து விட்டு வழக்கு எதுவும் போடாமல் விட்டு விடுகின்றனர்.
சில இடங்களில் பெரிய அளவில் குடோன்களே சிக்குகிறது, ஆனால் அவற்றின் உரிமையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது தவிர கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவர்கள் என பலரும் மாவா என்னும் ஒருவகை போதை பவுடரை உபயோகிக்கின்றனர். இதை சாதாரணமாக வெற்றிலை பாக்கு கடைகளில் தயாரிக்கின்றனர். குடிசை பகுதிகளில் அதிகம் விற்பனை ஆகின்றது.
சமூக சேவகர் ஒருவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை பல மாதங்களாக அழைத்தும் போதை பொருட்கள் விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை உணவு பாதுகாப்பு கூடுதல் ஆணையரை சந்தித்த அவர் இன்று சோதனையிட வரவில்லையென்றால் நாளையே நோட்டீஸ் அடித்து உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டு பிள்ளைகளுக்கு சென்னை கடைகளில் விற்கப்படும் மாவா, குட்கா, பான்பராக், ஹன்ஸ் போன்றவற்றை பரிசளிப்போம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் 5 அதிகாரிகளுடன் ஒரு குழு சைதாப்பேட்டையில் சில கடைகளில் மட்டும் சோதனையிட்டனர். எல்லா கடைகளிலும் மாவா, பான் பராக், குட்கா, ஹன்ஸ் போன்றவை ஏராளமாக சிக்கி உள்ளது. கோட்டூர்புரத்தில் விஜய் என்ற வாலிபர் மாவாவை தனது இல்லத்தில் சொந்தமாக தினமும் கிலோ கணக்கில் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அடுத்து பட்டினப்பாக்கம் வருவதற்குள் ஜீப்பில் அழைத்து வந்தவர்கள் வழியிலேயே அவரை தப்பிக்க விட்டுவிட்டனர்.
இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர் அதிகாரிகளுடன் நடு ரோட்டில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது. சமூக ஆர்வலரின் கேள்விக்கு அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை, அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை கமிஷனரிடம் புகார் அளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.


No comments:

Post a Comment