Jul 4, 2014

பச்சை பட்டாணியில் ரசாயன சாயம் கலப்பு



ஊட்டி:கடைகளில் விற்கப்படும், பச்சை பட்டாணியில், நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனம் கலந்து விற்கப்படுவது, அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்துள்ளது.நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர்கள், நேற்று, ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில், சோதனை நடத்தினர். இதில், பல கடைகளில், காலாவதியான தின்பண்ட பாக்கெட்கள், குளிர் பானங்கள்; கலப்பட தேயிலை துாள்; தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் என, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல கடைகளில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பச்சை நிற பட்டாணியில், செயற்கை சாயம் கலந்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை, நீலகிரி மாவட்ட அலுவலர், டாக்டர் ரவி கூறியதாவது:இயற்கையாக விளையக் கூடிய, பச்சை பட்டாணியை, பலரும் விரும்பி உண்கின்றனர். அவை, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களுக்கு ஆசையை துாண்டும் நோக்கில், பச்சை நிறம் ரசாயன சாயத்தை அதிகளவில், இந்த பட்டாணியில் சேர்க்கின்றனர். அதில், 'பிரில்லியன்ட் புளு', 'டாடாரேசைன்' என்ற ரசாயனங்கள் உள்ளன. அவற்றை உண்ணும் மக்களுக்கு, கேன்சர், வாய் புண் உட்பட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பளபளக்கும் பச்சை பட்டாணிகளை வாங்க கூடாது. உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் இத்தகைய செயலை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment