Jul 4, 2014

காலாவதியான, கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடி



ஊட்டி, ஜூலை 4:
உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாலாடா முதல் எடக்காடு வரை 100 கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள், காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்பட தேயிலை தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள், குளிர்பானங்கள், உணவுப் பொருட் கள், கலப்பட தேயிலை தூள், மசாலா பொடிகள், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்றபொருட்கள் விற்பனை செய்வதாக உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் ரவி தலைமையில் ஆய்வாளர்கள் எம்.பாலாடா, இத்தலார், எமரால்டு, எடக்காடு போன்ற பகுதி கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள், போதை பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவைகளின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் பெட்டிக் கடைகள் மற்றும் டீ கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இது போன்று தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருட்களை யாரேனும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ரவி தெரிவித்தார்.

No comments:

Post a Comment