Jun 24, 2014

சேலம் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை முற்றுகை ‘சீல்’ வைக்கப்பட்ட ஆலையை திறக்க வலியுறுத்தல்

சேலம், ஜூன்.24-
சேலம் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ‘சீல்’ வைக்கப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆலைக்கு சீல் வைப்பு
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் கடந்த 20-ந் தேதி ஆய்வுக்கு சென்றனர். அப்போது ஆத்தூர் பகுதிகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு மாவை வாங்கி வந்து கலப்படம் செய்து ஜவ்வரிசி உற்பத்தி செய்து வந்ததும், ஜவ்வரிசியில் ராசாயன பவுடர் மற்றும் மக்காச்சோளம் மாவு கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஜவ்வரிசி ஆலை மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தின் மூலம் உரிமம் பெறாமல் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஜவ்வரிசி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதிகாரி முற்றுகை
இந்தநிலையில், சேலம் தாலுகா ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்று காலையில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அலுவலகத்தில் இருந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவை முற்றுகையிட்டனர்.
அப்போது, ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஜவ்வரிசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் கலப்படம் இல்லாமல் ஜவ்வரிசி மாவு தரமான முறையில் உற்பத்தி செய்வதாகவும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் அதிகாரியிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
3 மணி நேரம் பேச்சுவார்த்தை
இதையடுத்து ஜவ்வரிசி ஆலையில் எடுக்கப்பட்ட மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அறிக்கை வந்தபிறகு ஜவ்வரிசி ஆலையை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களிடம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறினார். இது தொடர்பாக ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், டாக்டர் அனுராதாவை சுமார் 3 மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீல் வைத்த ஆலையை திறக்க வேண்டும்
இது குறித்து சேலம் ஜவ்வரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மதிவாணன் கூறுகையில், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். மேலும், சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில், சுகாதாரமான முறையில் தரமானதாக ஜவ்வரிசி மாவில் கலப்படம் இல்லாமல் உற்பத்தி செய்வோம் என்று உறுதி கூறினோம், என்றார்.

No comments:

Post a Comment