Jun 24, 2014

குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு குமரியில் கார்பைடு கல் வைத்து விற்கப்படும் மாம்பழங்கள்

நாகர்கோவில், ஜூன் 24:
குமரியில் பல இடங்களில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு உள்ளன. இதை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்துக்கு தனி மவுசு உண்டு. தமிழகம் முழுவதுமே மாம்பழம் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்துக்கு சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. ஆரம்பத்தில் வரத்து குறைவால் ஒரு கிலோ பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ. 70 முதல் 80 வரையிலும், ஒட்டு மாம்பழம் ரூ. 40 முதல் 45 வரையிலும், செந்தூரம், ருமேனியா, மல்கோவா போன்றவை ரூ. 60 முதல் 80 வரையிலும் விற்பனை ஆனது.
தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சற்று குறைந்து இருக்கிறது. மல்கோவா போன்ற உயர் ரக மாம்பழங்கள் கூட ரூ.60, ரூ.50 என்ற வகையில் கிடைக்கின் றன. ஒட்டு மாம்பழம் ரூ. 30 முதல் 40 வரை விற்கப்படுகிறது.
இதற்கிடையே ஒரு சில வியாபாரிகள், கார்பைடு எனப்படும் சுண்ணாம்புக் கல்லை கொண்டு மாம்பழங்களை ஒரே நாளில் பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். முக்கிய மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளிலும் இது போன்ற கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் விற்பனைக்காக வந்து இருக்கின்றன. இந்த பழங்களை சாப்பிடும் போது உடல் கோளாறு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படுகிறது.
சுகாதார துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை இதை கண்காணித்து இது போன்று கார்பைடு கல் வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கும் பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அமோகமாக விற்பனை ஆகிறது.
இந்த பிரச்னை குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, நாகர்கோவிலில் ஒரு சில கடைகளில் விற்பனையான மாம்பழங்களை பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறாம். அதன் முடிவு எங்களுக்கு இன்னும் வர வில்லை. அந்த முடிவு வந்த பிறகு தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றனர். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டவை என தெரிந்த பிறகும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் சுகாதார உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment