Jun 30, 2014

களை கட்டும் கலப்பட ஸ்நாக்ஸ் விற்பனை சிறுவர்களுக்கு சிக்கல் காலாவதி தேதியும் இல்லை


உத்தமபாளையம், ஜூன் 30:
தேனி மாவட்டத்தில் சிறுவர்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் அதிகளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுர், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், தேவாரம், கோம்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சிறுவர்களை கவரக்கூடிய சிப்ஸ் வகைகள், சாக்லெட், தடை செய்யப்பட்ட சீனா மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றில் பேக்கிங், காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. விலை குறைவாக விற்க வேண்டும் என்பதற்காக தரக்குறைவான பொருட்களில் இந்த ஸ்நாக்ஸ் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு, மக்காச்சோளத்தில் தரம் குறைந்த வகைகளை வாங்கும் சிலர் அதிலிருந்து பாப்கார்ன்களை தயாரிக்கின்றனர். இதை ரூ.2 முதல் 10 வரை குறைந்த விலைக்கு விற்கின்றனர். தரம் உயர்ந்த பாப்கார்ன் அதிகபட்சமாக ரூ.20 முதல் விற்கப்படுகிறது. எனவே, விலை குறைந்த பாப்கார்ன்களை சிறுவர்கள் விரும்பி உண்கின்றனர். முக்கியமாக இவைகள் பள்ளிகள் அருகிலேயே அதிகம் விற்கப்படுகின்றன. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறுவர், சிறுமியரின் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மஞ்சள்காமாலை, புற்றுநோய், குடல் சம்பந்தமான நோய் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளன.
தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஐஸ்கீரிம் கம்பெனிகளும் புற்றீசலாய் பெருகி வருகின்றன. இந்த கம்பெனிகளில் தடை செய்யப்பட்ட சீன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தினந்தோறும் வீதிகளில் உலாவருகின்றன. ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு 20 தினங்களுக்கு மேல் ஸ்டோரேஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி சாப்பிடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி பாதிப்பை அடைகின்றனர். இதேபோல் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்று சொல்லப்படும் சீனா மிட்டாய்கள் அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் பெரும்பாலும் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். கிராமப்புறங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் சோதனை நடத்துவதில்லை. எனவே, அதிகாரிகள் சோதனை நடத்தி கலப்பட ஸ்நாக்ஸ் விற்பனையை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment