Jun 21, 2014

சேலத்தில் ஜவ்வரிசியில் கலப்படம்: ஆலைக்கு "சீல்' வைப்பு


சேலத்தில் ஜவ்வரிசியில், மக்காச்சோளம் மாவை கலப்படம் செய்ததாக தனியார் ஜவ்வரிசி ஆலைக்கு வெள்ளிக்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் ஜவ்வரிசி உற்பத்தி ஆலையில் விதிமுறைகளை மீறி மரவள்ளிக் கிழங்கு, மாவுடன் மக்காச்சோள மாவை கலந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுவதாக சென்னையிலுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட ஜவ்வரிசி ஆலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த ஆலையில் ஜவ்வரிசி மாவுடன், மக்காச்சோள மாவு கலப்படம் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆய்வகப் பரிசோதனைக்காக அங்கிருந்து மாதிரிகள் எடுத்து அனுப்பப்பட்டன. இதையடுத்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அதில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment