May 26, 2014

கலப்பட பால் விற்பனையால் கேன்சர் பாதிப்பு அபாயம்

தர்மபுரி, மே 26: 
தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் நகரில் டீக்கடைகளுக்கு கலப்பட பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கேன்சர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 
தர்மபுரி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டீக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தர்மபுரி நகரையொட்டிய கிராமங்களில் இருந்து கேன்களில் பால் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நகரில் சில டீக்கடைகளில் கலப்பட பால் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வீடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
தர்மபுரி அருகில் உள்ள கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் கேனில் 6 லிட்டர் பாலுடன், 4 லிட்டர் கலப்பட பாலை கலக்கின்றனர். இந்த கலப்பட பாலில் ஸ்டார்ச் பவுடர், தண்ணீர், வெண்மையாக்க கூடிய கெமிக்கல் ஆகியவற்றை சேர்த்து, நல்ல பாலுடன் கலந்து விற்பனை செய்கின்றனர். 
பால் கலப்படம் செய்து விற்பனை செய்வதை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலப்பட பால் விற்பனை அமோகமாக உள்ளது. கலப்பட பாலை அருந்துவதால் நோய் பாதிப்பு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கலப்பட பாலை தொடர்ந்து அருந்துவோருக்கு குடலில் புண் உண்டாகும். ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு கேன்சர் வரும் அபாயமும் உள்ளது, என்றனர். எனவே, பாலில் கலப்படம் செய்வதை கண்டறிந்து, அதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment