May 26, 2014

அதிக சுவைக்காக உணவில் ரசாயன கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

ஆலங்குடி, மே26:
அதிக சுவைக்காக உணவில் ரசாயன கலப்படம் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொய் விருந்துகள் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நடப்பதால் திருமண மண்டபங்களில் வேறு நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் கிடைப்பதில்லை. அதனால் தினமும் ஒவ்வொரு மண்டபத்திலும் சுமார் 25 முதல் 50 ஆடுகள் வரை கறிக்காக அறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஆடு அறுக்கும் இடத்தில் சுத்தமின்றி ஆட்டுக்கறிக் கழிவுகள் அருகிலேயே கொட்டப்படுவதால் புழுக்கள் உற்பத்தியாகி ஆட்டுக்கறிகளுடன் கலந்து விடும் அவல நிலை இருந்தது.
அதேபோல இந்தாண்டு நடக்காமல் இருக்க இப்போதே மண்டபங்களில் ஆடு அறுக்கும் இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். மேலும் தினமும் சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் உணவு கழிவுகளையும், சாப்பிட்ட இலைகளையும் மண்டபங்களில் இருந்து தூரத்தில் கொட்டி அழிக்க வேண்டும்.
ஆடுகள் கறிக்காக அறுக்கும் முன்பு எடை கூடுவதற்காக சோடா உப்பு போன்ற ரசாயன கலவைகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனை தடை செய்ய வேண்டும். சமையல் செய்யும்போது சுவைக்காக அதிகம் குடல் பாதிப்பை ஏற்படுத்தும் அசினமோட்டோ, மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். ஒவ்வொரு மண்டபத்திலும் சுகாதாரமான குடிதண்ணீர் வழங்க வேண்டும். சாப்பாடுகள் பரிமாறும் சமையல் கலைஞர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்த பாதுகாப்பான இடவசதி செய்து தரவேண்டும். மாதம் 3 முறை சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலக தொலைபேசி எண்களை பொதுமக்கள் பார்வைக்கு எழுதி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் வரலெட்சுமி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜேம்ஸ், சிவமுருகன், ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, பெரியாளூர், ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள திருமண மண்டபங்களில் சமையல் கூடம் மற்றும் சுற்றுப் புறங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பிறகு மண்டப உரிமையாளர்களிடமும், சமையல் கலைஞர்களிடமும் திருமண மண்டபங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவு சமைக்கும் போது சுவைக்காக அஜினாமோட்டோ போன்ற ரசாயனங்களை கலப்படம் செய்யக் கூடாது.
சமையல் முகவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும், சமையல் வேலை செய்பவர்கள் புகைப்பிடிக்கவோ, புகையிலை பயன்படுத்தவோ, மதுக்குடிக்கவோ கூடாது, விழா முடிந்தபிறகு மண்டபம், சுற்றுப்புறம், சமையல்கூடம், கழிவறை அனைத்தும் சுத்தப்படுத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
மேலும் இனிமேல் வாரத்தில் சில நாட்கள் ஆய்வுகள் செய்யப்படும். ஆய்வில் ஏதேனும் தவறுகள் நடப்பது தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மண்டபங்களில் பொதுமக்கள் பார்வைக்கு எழுதி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment