May 28, 2014

சேலம் பஸ்நிலைய கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் விதிமுறையை மீறியவர்களுக்கு நோட்டீசு


சேலம்,மே.28-
சேலம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறையை மீறிய கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
கடைகளில் சோதனை
சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சில கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா போன்ற பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருமூர்த்தி, பாலு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளில் 3 குழுக்களாக தனித்தனியாக சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் தரம் குறித்து நேரடி பரிசோதனை செய்தனர். அப்போது பல கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
நோட்டீசு
இந்த சோதனையின்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. இவற்றை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர். சிக்கிய பொருட்களின் மதிப்பு பல ஆயிரம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது.
இத்தகைய பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 5 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்கினார்கள். தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment