May 28, 2014

போலி குளிர்பான விற்பனை 'ஜோர்': விழிக்குமா உணவு பாதுகாப்பு துறை?

கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், பிரபல பிராண்டுகள் பெயரில், போலி குளிர்பானங்கள் விற்பனை, தமிழகம் முழுவதும் கனஜோராக நடந்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், உணவு பாதுகாப்புத் துறை, துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, மோர், பழச்சாறு, இளநீர் பருகுவதோடு, தர்பூசணி, வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் சாப்பிடுகின்றனர். இந்த வரிசையில், குளிர்பானங்கள் முக்கிய இடம் பிடித்து உள்ளன. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள், போலி குளிர்பானங்களை புழக்கத்தில் விட்டு, கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். 
குடிசைத் தொழில்போல், பிரபல பிராண்டுகளின் பாட்டில்களில், போலியாக தயாரித்த பானங்களை அடைத்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர். ஆரம்பத்தில், 'டாஸ்மாக்' பார்களை மட்டும் குறிவைத்து நடந்த விற்பனை, தற்போது, குக்கிராம பெட்டிக்கடைகள் வரை, நீண்டு உள்ளது. லாபம் அதிகம் கிடைப்பதால், விவரம் தெரிந்தும், தெரியாமலும் வியாபாரிகள் இவற்றை வாங்கி விற்கின்றனர். இவற்றை வாங்கி குடிக்கும் மக்கள், பல்வேறு நோய் பாதிப்பு களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. 'வாந்தி, பேதி ஏற்படுவதோடு, போலி குளிர்பானத்தில் கலருக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது,' என, டாக்டர்கள் கூறுகின்றனர். இதுபோன்று, தரமின்றி தயாரித்து விற்கப்படும், ஒரு ரூபாய் தண்ணீர் பாக்கெட்டுகளாலும், விபரீத பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது என, எச்சரிக்கப்படுகிறது. போலி குளிர்பானம், தரமற்ற குடிநீர் விற்பனையை, சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும், உணவு பாதுகாப்புத் துறை தான் தடுக்க வேண்டும். நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் முன், இந்த துறை அதிகாரிகள், துரிதகதியில் செயல்பட்டு, போலி குளிர்பானத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment