May 29, 2014

நாமக்கல் அருகே மாம்பழ மண்டிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

நாமக்கல், மே 29:
நாமக்கல் அருகே மாம்பழ மண்டிகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 25 கிலோ மாம்பழம் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாதேஸ்வரன், சண்முகம், ராமசாமி, சங்கரநாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சேந்தமங்கலம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாம்பழக்கமிஷன் மண்டிகளில் சோதனை செய்யப்பட்டது. கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழம் எதுவும் அங்கு இல்லை. ஒரு மாம்பழ மண்டியில் மட்டும் எத்திலினை முறையாக பயன்படுத்தாமல், நேரிடையாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து அங்கிருந்த சுமார் 25 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment