May 29, 2014

வடசென்னை பகுதியில் தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை

தண்டையார்பேட்டை, மே 29:
ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்வதாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி நாராயணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் இளங்கோவன், ஜெயராஜ், லோகநாதன், ஜெயகோபால், சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், மேற்கண்ட பகுதிகளில் உள்ள பழரச கடைகள், குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில், தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ரஸ்னா, மேங்கோ ஜூஸ் உள்ளிட்ட குளிர்பான பாக்கெட்டுகளையும், காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளையும் மூட்டை மூட்டையாக கைப்பற்றினர்.
இதேபோல், வண்ணாரப்பேட்டை பிச்சாண்டி சந்து, பாண்டிச்சேரி முருகேசன் தெரு ஆகிய இடங்களில் இயங்கி வந்த குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து காலாவதியான குளிர்பானங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சோதனையில், 20 மூட்டைகளில், சுமார் 600 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவற்றை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி அழித்தனர்.
அண்ணாநகர்:
கோயம்பேடு, காளியம்மன் கோயில் சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், அங்குள்ள கடைகளில், நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி இல்லாத குளிர்பானங்கள் விற்பது தெரிந்தது. இதையடுத்து, தரமற்ற குளிர்பான பாட்டில்கள் 500, பெயர் பொறிக்கப்படாத ரஸ்னா பாக்கெட்டுகள் 1,000, மோர் பாக்கெட் 1,000, பாதாம் பால் 200 பாட்டில், ரோஸ் மில்க் 100 லிட்டர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றை, அங்கங்கேயே கொட்டி அழித்தனர். தொடர்ந்து, இதுபோன்று தரமற்ற குளிர் பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1.5 லட்சம் குட்கா பறிமுதல்:
சவுகார்பேட்டையில் நடைபெற்ற சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த 50 கிலோ போதை பாக்கு, புகையிலைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு 1.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.
கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற குளிர்பானங்கள் மற்றும் குட்கா பொருட்களை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கும் அதிகாரிகள்.

No comments:

Post a Comment