Jan 21, 2014

அங்கன்வாடி மையங்களுக்கு காலாவதி உப்பு பாக்கெட்கள் சப்ளை ஊராட்சி துணைத் தலைவர் புகார்

பெரம்பலூர், ஜன. 21:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு 2010ல் தயாரிக்கப்பட்ட காலாவதியான உப்பு பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாக்கெட் பழசு; உள்ளிருக்கும் உப்பு புதுசு என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் உணவில் சேர்க்க பயன்படுத்தப்படும் உப்பு பாக்கெட்டுகள் அந்தந்த மையங்களுக்கு அரசின் மூலம் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன. 
இந்நிலையில், நேற்று ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வழக்கமாக வழங்கப்பட்டுவரும் உப்பு பாக்கெட்டை பார்வையிட்ட ஊராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், அதில் உப்பு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்தார். அந்த உப்பு பாக்கெட்கள் 2010ல் தயாரிக்கப்பட்டு காலாவதியானவை என தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். 
இதையடுத்து, காலாவதியான தேதிகளை கொண்ட அந்த உப்பு பாக்கெட்களை எடுத்துக் கொண்டு கிராம மக்களையும் உடன் அழைத்துக்கொண்டு பெரம்பலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தார். அங்கு நடைபெற்று கொண்டிருந்த குறை தீர் நாள் கூட்டத்திற்கு சென்ற அவர், எந்தப் பொருளும் கெடாமல் இருப்பதற்கு தானே உப்பு போடுவார்கள்; ஆனால் கெட்டுப்போன உப்பையே எங்கள் பகுதிக்கு உணவாகத் தருகிறார்களே என்று புகார் தெரிவித்தார். 
மேலும், அவர் கொண்டு வந்த உப்பு பாக்கெட்டில் 2010 பிப்ரவரியில் தயாரிக்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. இதன் படி, அதன் காலாவதி தேதி 2013 மார்ச் மாதமாகும். எனவே, காலாவதியாகி 22 மாதங்கள் கழித்து விநியோகிக்கப்படும் இந்த உப்பு பாக்கெட்களை சப்ளை செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே விநியோகித்த உப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய உப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் குறை தீர் நாள் கூட்ட அரங்கமே அதிர்ச்சியால் ஸ்தம்பித்தது. 
பாக்கெட் பழசு;  உள்ளிருப்பது புதுசு 
ஊராட்சி துணைத் தலைவரின் புகாருக்கு விளக்கம் அளித்து கலெக்டர் தரேஸ் அஹமது கூறியதாவது: 
இந்த விவகாரம் ஏற்கனவே எங்கள் காதுக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்த போது உப்பு அடைக்கப்பட்டுள்ள பாக்கெட் மட்டுமே பழசு; ஆனால் அதன் உள்ளே உள்ள உப்பு புதுசு. அந்த உப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என்றார். இதே கருத்தை டிஆர்ஓ சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஊராட்சித் துணைத் தலைவருடன் வந்திருந்த நக்கசேலம் கிராம மக்களுக்கும் விரிவாக விளக்கிக் கூறினர். இதனால் காலாவதியான உப்பு பாக்கெட் விஷயத்தில் பலருக்கும் பாதிப்பு ஏற்படுமே என நினைத்துவந்த விஷயமே உப்பு சப்பில்லாமல் போய்விட்டதே என நினைத்து புகார் கொடுக்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.

1 comment:

  1. FDA s action is needed. Collectors explanation will not stand in the court of law.

    ReplyDelete