Dec 9, 2013

மக்கள் உடல் நலம் பாதிக்கும் அபாயம் கலப்பட டீ தூள் பயன்பாடு அதிகரிப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊட்டி, டிச.9: 
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் கலப்பட தேயிலை தூள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தரமான தேயிலை தூளுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் நல்ல மார்க்கெட் உள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா போன்ற வெளிநாட்டு வியாபாரிகள் நீலகிரிக்கு வந்து தேயிலை தூளை வாங்கி செல்கின்றனர். இதேபோல் சுற்றுலா வரும் பயணிகளும் தரமான தேயிலை தூளை மொத்தமாவோ அல்லது சில்லரையாகவோ வாங்கி செல்கின்றனர். 
இதனால் பொதுமக்கள் பலர் தொழிற்சாலைகளில் இருந்து மொத்தமாக தேயிலை தூளை வாங்கி சில்லரையாக பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மாவட்டத்தில் உள்ள சில டீ கடைகளில் சாயம் கலந்த கலப்பட தேயிலை தூளை பயன்படுத்தி வருகின்றனர். தரமான தேயிலை தூளை வாங்கி அதில் மரத்தூள், புளியங்கொட்டை போன்றவற்றை அரைத்து கலந்து விடுகின்றனர். சிலர் டிக்காஷன் வருவதற்காக சாயப்பொடிகளை கலந்து டீ தயாரிக்கின்றனர். இதனை தொடர்ந்து அருந்தினால் உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஊட்டி பஸ் நிலையம், ஏ.டிசி.மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள டீ கடைகளிலும், ஊட்டி நகரில் உள்ள ஒரு சில ஆவின் பூத்களிலும் டீ தயாரிக்க கலப்பட தேயிலை தூள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலப்பட தேயிலை தூளை கட்டுப்படுத்த தேயிலை வாரியம் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேயிலை உற்பத்தி செய்யும் மாவட்டத்திலேயே கலப்பட தேயிலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
கலப்பட தேயிலை பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த தேயிலை வாரியமும், உணவு பாதுகாப்புத் துறையும் கை கோர்த்துள்ளன. ஆனால் இதுவரை இருதுறையும் இணைந்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில், தற்போது பெருகி வரும் கலப்பட தேயிலை தூளின் தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலப்பட தேயிலை தூள் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தவறும்பட்சத்தில் மக்கள் மத்தியில் நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment