Dec 2, 2013

நிறுவன பெயர் இல்லாமல் பாமாயில் விற்பனை உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் அம்பலம்

மேட்டூர்: மேட்டூர் பகுதிக்கு விற்பனைக்கு வரும் நிறுவனத்தின் பெயர் இல்லாத பாமாயில் விற்பனைக்கு வருகிறது. உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பாமாயிலை சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை, நாடு முழுவதும் வினியோகம் செய்கின்றன. சமீபகாலமாக நிறுவனத்தின் பெயர் இல்லாமல், மேட்டூர் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பாமாயில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேட்டூர் கடைகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், நிறுவனத்தின் பெயர் இல்லாத பாமாயில் பயன்படுத்தப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த டின்களில் இருந்த பாமாயிலை, சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
மேட்டூர் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
நிறுவனத்தின் பெயர் பொறித்த, ஒரு லிட்டர் பாமாயில், 10 பாக்கெட் அடங்கிய பெட்டி, 630 ரூபாய். 15 கிலோ எடையுள்ள, ஒரு டின் பாமாயில், 1,000 முதல், 1,100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. புதிதாக ஒரு டின் தயாரிக்க, 70 ரூபாய் செலவாகிறது.
எனவே, செலவை குறைப்பதற்காக, சில மொத்த வியாபாரிகள், உபயோகப்படுத்திய பழைய டின்களில், பாமாயில் நிரப்பி அனுப்பி வைக்கின்றனர். நிறுவன பெயர் இல்லாத இந்த பாமாயில் டின், பிராண்ட் பெயர் பொறித்த பாமாயிலை விட விலை, 70 ரூபாய் குறைவாக உள்ளது. இதனால், கடை, ஹோட்டல் உரிமையாளர்கள் நிறுவன பெயர் இல்லாத பாமாயிலை வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
எண்ணை டின்களை விற்பனைக்கு அனுப்பும் நிறுவனங்கள், டின்களில் நிறுவனத்தின் பெயர், உற்பத்தி செய்த தேதி அல்லது விற்பனைக்கு அனுப்பிய தேதி, தரம் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பாமாயிலை, சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே டின்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றன.
சுத்திகரிப்பு செய்யாத பாமாயிலில் தயாரித்த உணவு பொருட்களை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, மாரடைப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேட்டூர் பகுதியில் விற்பனை செய்யப்படும், நிறுவன பெயர் இல்லாத பாமாயிலை சாம்பிள் எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அது தரமற்றது என தெரியவந்தால், சம்பந்தபட்ட விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment