Oct 23, 2013

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தகவல்

சேலம், அக்.23&
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலப்படத்தை தடுக்க ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையில் முக்கிய அம்சமாக கருதப்படுவது இனிப்பு வகைகள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணியில் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றும், அவற்றில் ஏதாவது கலப்படம் செய்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்வீட் மற்றும் திருமண மண்டபங்களில் அதிகளவில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்புகள் வகைகள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆத்தூர், மேட்டூர், இடைப்பாடி, சேலம் மாநகரத்தில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் 4 அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் திடீரென ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களுக்குள் புகுந்து ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலரை விட கூடுதலாக கலர் இருக்கக் கூடாது. தண்ணீர், ஆயில், மைதா மாவு, சர்க்கரை உள்பட ஸ்வீட் மற்றும் காரம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். இந்த கட்டுபாடுகள் அனைத்தையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஆய்வின்போது இனிப்பு வகைகளில் ஏதாவது கலப்படம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுகாதாரமாக இல்லாமல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த ஆய்வு தீபாவளி பண்டிகை வரை நடக்கும்.

No comments:

Post a Comment