Oct 23, 2013

குளிர்பான நிறுவனங்களில் சோதனை : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி : குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழக அதிகாரிகள், அவ்வப்போது சென்று, அதிரடி ஆய்வு நடத்த வேண்டும். குளிர்பானங்களில், மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், குளிர்பானங்களில், மனித உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சேர்த்து தயாரிப்பதாக, புகார்கள் வந்துள்ளன. இந்த குளிர்பானங்களை குடிப்போருக்கு, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, குளிர்பான தயாரிப்பை ஒழுங்குபடுத்துவதற்கு, தனி கமிட்டியை அமைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய,பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம், குடிமக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும்,
சட்டப் பிரிவுகள் தொடர்பானது. எனவே, கார்பனேட் கலந்த குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழக (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) அதிகாரிகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். மனித உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள், அதில் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை
கண்டறிய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment