Jun 2, 2016

உயிருக்கு எமனாகும் பிளாஸ்டிக் பாட்டில் 'சிரப்'... ஒரு பகீர் ரிப்போர்ட்!

மருத்துவத்துறைதான் மானிட வர்க்கம் இன்று தழைக்க மறுக்கமுடியாத காரணம். விதவிதமான நோய்களும் வகைவகையான மருந்துகளும் இந்த நூற்றாண்டில் பெருகியிருக்கிற சூழலில், மனித வர்க்கத்தின் ஒரே நம்பிக்கை மருத்துவத்துறைதான். 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் உடல் நலம் கெட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று நிற்கிறோம். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு பெரும்பாலும் எழுதித்தரப்படுபவை பாட்டிலில் விற்கப்படும் 'சிரப்'புகள். முன்பெல்லாம் கண்ணாடி பாட்டில்களில் வந்த இந்த சிரப்புகள், இப்போதெல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுதான் கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. 
இப்போது இதுதான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதாவது 'பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள மருந்தில் உள்ள வேதிப்பொருள், பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து நச்சுப் பொருளாக மாறுகிறது அல்லது விஷமாகிறது' என அதிர்ச்சி தருகிறது மத்திய சுகாதாரத் துறை. மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் 'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைஜின் அண்ட் பப்ளிக் ஹெல்த்' நடத்திய ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
மருத்துவத்துறையில் பிரபலமாக விளங்கும் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களான பெனட்ரில் மற்றும் அலெக்ஸ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளன. அதாவது இந்நிறுவனங்களின் இருமல் மருந்துகளில் தாது மற்றும் குரோமியம், கேட்மியம் போன்றவை அதிகமாக கலந்திருக்கிறது. இந்த மருந்துகளை அறை வெப்பநிலையில் வைக்கும் போது, மருந்தில் இருக்கும் தாது பொருட்கள் மற்றும் குரோமியம், கேட்மியத்துடன் பிளாஸ்டிக் வினை புரிந்து மருந்தில் நச்சு தன்மையை உருவாக்குகிறது.


பிரபலமான ஐந்து நிறுவனங்களின் மருந்துகளில் இது போன்ற பிரச்னை இருப்பதாக 'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைஜின் அண்ட் பப்ளிக் ஹெல்த்' அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது Pfizer's Mucaine Gel, Hemfer Syrup, Alex cough Syrup, Benadryl cough Syrup, PolybionMerck Multivitamin Syrup ஆகிய ஐந்து மருத்துகளில் பிரச்னை உள்ளது. பெனட்ரில் 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். அலெக்ஸ் இருமல் மருந்தை 'க்ளென் மார்க்' நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மேற்கூறியுள்ள மல்டி வைட்டமின் சிரப்பை ஜெர்மன் நிறுவனம் தயாரிக்கிறது. 
இது குறித்து சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டால், விதவிதமான பதிலை தெரிவிக்கின்றனர். 
“மருந்து பொருட்களை மட்டும்தான் நாங்கள் தயாரிக்கிறோம். மருந்துகளை அடைக்க பயன்படுத்தப்படும் பாட்டில்களை வெளியில் இருந்துதான் வாங்குகிறோம். எஃப் டி ஏ (Food and Drug Administration) பரிசோதனை செய்து அனுமதித்த பொருட்கள் மூலம் மருந்து பாட்டில்களை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்துதான் பாட்டில்களை வாங்குகிறோம்” என்கிறது ஆல்கெம் லேப்ஸ் நிறுவனம். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான பதில்களை தெரிவித்துள்ளன.


இந்த ஐந்து மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவில் அதிகமான சந்தை மதிப்பை வைத்துள்ளன. அதாவது பெனட்ரில் ரூ.50 கோடிக்கும், அலெக்ஸ் ரூ. 35 கோடிக்கும் கடந்த வருடம் மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. மேலும் ஃபைசர் நிறுவனத்தின் ஜெல் மட்டும் 50 சதவிகித சந்தை மதிப்பை வைத்துள்ளது. இதன் ஒரு ஆண்டு விற்பனை ரூ.100 கோடியாக உள்ளது. 
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மருந்துகளை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் அளவை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதாவது குழந்தைகளின் மருந்துகள், முதியோருக்கான மருந்துகள், கருவுற்றிருக்கும் பெண்கள் பயன்படுத்தும் மருந்துகள், மாதவிடாய் பிரச்னை காரணமாக சாப்பிடும் மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளை அடைப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை குறைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டில் பாதுகாப்பான அளவைக் கேட்டு ஆய்வு மையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய அரசு, ஆய்வு மையத்திடம் பாதுகாப்பான அளவை கேட்பதை விட, பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்கவோ அல்லது குறைப்பதற்கான வழிமுறைகளையோ தேட வேண்டும். அதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். 
உயிர் கொடுக்கும் மருத்துவத்துறை உயிரெடுக்கும் துறையாக மாறிவிடக்கூடாது!

No comments:

Post a Comment