Mar 20, 2016

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 600 கிலோ பழங்கள் பறிமுதல்

பூந்தமல்லி, 
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 600 கிலோ மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
எச்சரிக்கை
கோடை காலம் தொடங்கி விட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் மாங்காய் மற்றும் சப்போட்டா, பப்பாளி காய்கள் வரத்தொடங்கி உள்ளன. சில வியாபாரிகள் காய்கள் குறுகிய நாட்களில் பழுத்து வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக, அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் கார்பைடு ரசாயன கற்களை வைத்து காய்களை பழுக்க வைக்கின்றனர்.
ஆனால் ரசாயன கல் கொண்டு பழுக்கும் பழங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. எனவே இயற்கை முறையிலேயே காய்களை பழுக்க வைக்க வேண்டும் என்றும், ரசாயன கல் வைத்து பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகள் சோதனை
இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்கெட்டில் ரசாயன கற்கள் வைத்து காய்கள் பழுக்க வைக்கப்படுவதாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரி கதிரவன் தலைமையிலான குழுவினர், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று அங்குள்ள பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு கடையில் சப்போட்டா, பப்பாளி காய்களை ரசாயன கல் கொண்டு பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 600 கிலோ சப்போட்டா, பப்பாளி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவை அனைத்தும் அழிக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment