Nov 19, 2015

தேனியில் ரூ.1 கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 குடோன்களுக்கு சீல் வைப்பு



தேனி
தேனியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.1 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–
புகையிலை பொருட்கள்
தேனி நேரு சிலை அருகே நேற்று காலை ஒரு லாரியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்து இறக்கப்படுவதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்களது சோதனையில் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு இருந்த மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் 11 மூட்டைகளில் இருந்த புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே தேனி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.5 ஆயிரம் அபராதம்
அவர்களுடைய உத்தரவின் பேரில் உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் அதிகாரிகளும், தேனி போலீசாரும் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்றனர். அந்த குடோன் பூட்டப்பட்டு இருந்ததால், அதன் உரிமையாளரான தேனியை சேர்ந்த குமரேசனை அழைத்து வந்து திறந்தனர்.
அப்போது உள்ளே 50 மூட்டைகளில் புகையிலை மற்றும் பான்மசாலா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அங்கு வந்தனர்.
அங்கிருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர்களை பறிமுதல் செய்யப்பட்டதுடன், குடோன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரூ.1 கோடி மதிப்பு
அதேபோன்று தேனி கடற்கரை நாடார் சந்து பகுதியில் உள்ள சில குடோன்களிலும் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து அந்த குடோனில் உள்ள அறையினை வாடகைக்கு எடுத்து பொருட்களை வைத்திருந்ததாக கூறப்பட்ட நவரத்தினவேல் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் குடோனுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பின்னர் பெரியகுளம் சாலையில் ரவி என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்படி அதிகாரிகளின் சோதனையில் சுமார் 90 மூட்டை புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்படி பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனை தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment