Nov 9, 2015

மீண்டும் விற்பனைக்கு வந்தது மேகி நூடுல்ஸ்!

புதுடெல்லி: தரப் பரிசோதனையில் பாதுகாப்பான உணவு என்பது உறுதியானதால், நெஸ்லே நிறுவனம் தனது மேகி நூடுல்ஸ் விற்பனையை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொண்டன.
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் தடை செய்தது.
இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், மேகி நூடுல்சின் மாதிரிகளை, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து, முடிவை அறிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 3 ஆய்வுக் கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என நிரூபணமாகியுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, மேகி நூடுல்ஸ் வகைகளின் புதிய தயாரிப்பை மொத்த கொள்முதல் ஏஜெண்ட்களுக்கு நெஸ்லே நிறுவனம் இன்று அனுப்ப தொடங்கியுள்ளது. இந்த வாரத்துக்குள் எல்லா கடைகளிலும் மேகி நூடுல்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment