Oct 28, 2015

நெல்லிச்சாறு பானம் விற்பனை: உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

சேலம்: சேலம் வின்ஸ்டார் டிரேடர்ஸில், நெல்லிச்சாறு பானம் விற்பனை செய்யப்படுவது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா நேற்று ஆய்வு செய்தார்.
சேலம் புது பஸ் ஸ்டாண்டில், வின்ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவனத்தின் சார்பில், நெல்லிச்சாறு பானம் தயார் செய்து, விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், இந்த பானத்தின் தரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், வின் ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். இதில், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பென்சாலிக், அஸ்காரிக் அமிலம் சேர்க்கப்படுவது தெரிய வந்தது. அதனால், நெல்லிச்சாறு பானத்தை, 15 நாள் விற்பனை செய்ய தடை விதித்தார். வின் ஸ்டார் டிரேடர்ஸில், மீண்டும் நெல்லிச்சாறு பானம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு புகார் சென்றது. நேற்று மதியம், அந்த நிறுவனத்துக்கு ஆய்வுக்கு சென்றார். அங்கு, நெல்லிச்சாறு பானம், 200 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெட்டிக்கு ஒரு பாட்டில் வீதம் மாதிரி எடுக்கப்பட்டது. அனைத்து பெட்டிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. உணவு பகுப்பாய்வு கூடத்தில் இருந்து, ஆய்வு முடிவு வரும் வரை, விற்பனை செய்யக்கூடாது, என அங்கிருந்தவர்களுக்கு, அனுராதா எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: வின் ஸ்டார்ஸ் டிரேடர்ஸில், விற்பனை செய்யக்கூடாது எனக்கூறிய, நெல்லிச்சாறு பானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதனால் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, 200 பெட்டிகளில், நெல்லிச்சாறு பானம் இருப்பது தெரிய வந்தது. அனைத்து பெட்டிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பத்து பாட்டில் மாதிரிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வுக்கு அனுப்பப்படும். அதுவரை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment