Oct 28, 2015

தடைசெய்யப்பட்ட நெல்லிச்சாறு புட்டிகள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,000 நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு புட்டிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத் தயாரிப்பான நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு பானங்களில், கலப்படம் இருப்பதாக வந்த புகார்களின் பேரில், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா, கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு நடத்தினார்.
அதில், பென்சாயிக் அமிலம், அஸ்கார்பிக் அமில வகைகள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நெல்லிச்சாறு பானம், கற்றாழைச் சாறு பானம் ஆகியவற்றைத் தயாரித்து விற்க தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில், அவற்றை விற்பனை செய்வதாகவும், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் செய்வதாகவும் சேலம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
இதனடிப்படையில், சேலம் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் பானங்களை விற்பனை செய்யும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விற்பனை தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3,000 நெல்லிச்சாறு மற்றும் கற்றாழைச்சாறு புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் டி.அனுராதா கூறியது: தடை விதிக்கப்பட்ட நிலையில், பானங்கள் விற்பனை செய்வதாக வந்த புகார்களின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை இணை ஆணையர் டாக்டர் வாசக்குமார் உத்தரவையடுத்து, சேலத்தில் உள்ள குறிப்பிட்ட நிறுவனத்தில் ஆய்வு நடத்தியதில், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு பானங்கள் அடைக்கப்பட்ட 3,000 புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றிலிருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் வந்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment