Jul 7, 2015

உணவின் தரத்தை சோதிக்கும் ஆய்வகங்கள் தரமானவையா?


அனைவருமே பாதுகாப்பான உணவை சாப்பிடுவதைத்தான் விரும்புவோம். மனித வாழ்வில் பாதுகாப்பான உணவை சாப்பிடுவது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். இது அனைத்து மக்களுக்கும் கைகூடுவதில்லை. உணவுப் பொருள்களை விளைவிப் பதிலிருந்து அது தட்டில் உண்ணும் உணவாக கிடைக்கும் வரை அது பாதுகாப்பாக இருக்கிறதா என்பது கேள்விதான்.
அவசர உலகில் நாம் வாழ்கிறோம். எதிலும் அவசரம்தான். இதனாலேயே 2 நிமிஷத்தில் சமைக்கும் உடனடி உணவு வகைகள் மிகவும் பிரபலமானது. இப்போது கடைகளில் நெஸ்லேயின் மாகி தயாரிப்புகள் இல்லை. காரணம் அதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உலோகக் கலவையான ஈயம் மற்றும் மோனோ சோடியம் குளுட்டோமேட் இருந்ததுதான்.
ஒவ்வொரு உணவுப் பொருளிலும் எந்த அளவுக்கு உடலுக்குத் தீங்கு விளை விக்கும் பொருள்கள் இருக்கின்றன என்பதை அறிந்து, தெரிந்து பயன்படுத் துவது சரியானதாக இருக்கும். தீங்கின் அளவு, அதை எவ்விதம் எதிர்கொள்வது என்பதைப் பொறுத்தே நமது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பொருளிலும் உள்ள ரசாயனப் பொருள்களின் அளவை தெரிந்து கொள்வது மற்றும் அது உடல் ஏற்கத் தக்க அளவில் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதுதான் இதற்குச் சிறந்த வழி. உணவுப் பொருள்களின் தரத்தை சோதிப்பதற்கு தேசிய அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் (என்ஏபிஎல்) உள்ளன. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள் களில் 17 ஆயிரம் வகையான பொருள் களை இந்த ஆய்வகங்கள் சோதித்து அவற்றுக்குத் தரச்சான்று அளிக்கின்றன என்றால் சற்று வியப்பாகத்தானிருக்கும்.
நாட்டில் மொத்தம் 12 மத்திய ஆய்வகங்களும் மாநிலங்களில் 72 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் உள்ளன. இது தவிர என்ஏபிஎல் அங்கீ காரம் பெற்ற 65 தனியார் துறையைச் சேர்ந்த ஆய்வகங்களும் உணவின் தரத்தை பரிசோதித்து சான்றளிக்கின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு உணவுப் பொருள் இதுபோன்ற சர்ச்சை அல்லது சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். 2003-ம் ஆண்டில் காட்பரி சாக்லேட்டில் புழுக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் காட்பரி சாக்லேட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து 2006-ம் ஆண்டில் பன்னாட்டு குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களான கோக் மற்றும் பெப்சியில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2014-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான கென்டகி பிரைட் சிக்கன் (கேஎப்சி) டெல்லி விற்பனையகத்தில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்து அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தும் 32 பொருள்களுக்கு உணவு பாதுகாப்பு தரச்சான்று மையம் அனுமதி மறுத்தது.
இந்தியாவில் பிரபலமாகத் திகழும் ஹால்திராம் தயாரிப்புகளுக்கு அமெரிக்க உணவு கட்டுப்பாட்டு அமைப்பு (யுஎஸ்எப்டிஏ) தடை விதித்தது. இவற்றில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறி தடை விதித்தது.
உணவுப் பொருள்களில் மிக முக்கியமான நான்கு உலோகக் கலவைகள் இருக்கக் கூடாது. அதாவது காட்மியம், ஆர்செனிக், பாதரசம் (மெர்குரி), ஈயம். இவை மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நமது உடலுக்கு தாமிரம் மற்றும் ஈயம் உள்ளிட்ட கனிமச் சத்துக்கள் தேவை. ஆனால் இவையே அதிக அளவில் சேர்க்கப்பட்டால் அது நச்சாக மாறிவிடும். இதேபோல குடிநீரில் உலோகக் கலவையோ அல்லது காற்றில் நச்சுப் புகையோ கலந்தால் அது உடலின் செயல்பாடுகளைக் குலைத்துவிடும்.
குறைவான தரத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களின் வழியாக நமது உடலில் உலோகம் சேர்ந்துவிடும். குடிநீர் மூலம் ஈயம் சேரும்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகங்கள் போதிய அளவு நவீன சாதனங்களுடன் இல்லை என்ற குற்றச்சாட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 2012-ம் ஆண்டிலேயே மத்திய உணவு ஆய்வக இயக்குநர் சத்ய பிரகாஷ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ளார்.
மத்திய அரசின் ஆய்வகங்களில் 6 ஆய்வகங்களில் போதிய வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பழங்கள், காய்கறிகள், குளிர்பானங்களைக் கூட சோதிக்கும் வசதி இவற்றில் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகக் தெரியவில்லை.
பொதுமக்களின் நலன் சார்ந்த குறிப்பாக உணவு, குடிநீர் சார்ந்த விஷயங்களில் அரசு நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். இது சார்ந்த துறை களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அதேபோல உணவுப் பொருள்களை சோதிக்கும் ஆய்வகங்களின் தரத்தை உயர்த்த வேண்டியதும் கட்டாயமாகும்.
அமெரிக்காவில் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியைப் பெறுவது மிகவும் கடினமாகும். அந்த அளவுக்கு விதிமுறைகள் அங்கு கடுமையாக உள்ளன. இதே அளவுக்கு விதிமுறை களை இங்கும் கடுமையாக்க வேண்டும்.
உணவுப் பொருள் தரத்தில் விதிமுறை களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமில்லாத பொருள்களுக்கு அனுமதி அளிக்கவே கூடாது. இதுபோன்ற தொடர் கண்காணிப்புதான் அவசியம். அனைத்துக்கும் மேலாக ஆய்வகங்களின் தரத்தை உயர்த்துவது மிக மிக அவசர அவசியமாகும்.

No comments:

Post a Comment