Jun 29, 2015

சாம்பார் வடையில் "பிளாஸ்திரி பேண்டேஜ்'வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி

சேலம்:சேலத்தில், தனியார் ஹோட்டல் சப்ளை செய்த சாம்பார் வடையில், "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்த சம்பவம், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், சின்னதிருப்பதி அடுத்த, அபிராமி கார்டனைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், நேற்று, காலை, 10.30 மணிக்கு, சேலம், ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் பழமுதிர் நிலையத்தில், இயங்கி வரும் ஹோட்டலில், "சாம்பார் வடை' இரண்டு பாக்கெட் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
வீட்டிற்கு கொண்டு சென்ற முரளிதரன், தன் மகள் பிரியாவிடம், சாம்பார் வடை பார்சல் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அப்போது, பிரியா, ஒரு சாம்பார் வடையில் ஒரு பாக்கெட்டை உடைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர், இரண்டாவது பாக்கெட்டை உடைத்து பார்த்த போது, அந்த பாக்கெட்டில், விரல் காயத்திற்கு பயன்படுத்தப்பட்ட "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்தது.
அதிர்ச்சியடைந்த பிரியா, தந்தை முரளிதரனிடம் தெரிவித்துள்ளார். அவர், உடனடியாக சாம்பார் வடை பாக்கெட்டை எடுத்து கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் ஹோட்டலுக்கு சென்று, அங்கிருந்த மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ""ஹோட்டலில் நடந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; பெரிது படுத்த வேண்டாம்,'' என்றார்.
சாம்பார் வடையில், "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்த சம்பவம் பரவியதால், பலர் ஹோட்டல் முன்பாக குவிந்தனர். சாப்பிடும் உணவு பொருளில், தொடர்ந்து புகார் எழுவதால், வாடிக்கையாளர் மத்தியில் கடும், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. "சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், தனியார் ஹோட்டல்களை, அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் அனுராதா கூறுகையில்,""சாம்பார் வடையில், "பிளாஸ்திரி பேண்டேஜ்' கிடந்தது தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் கொடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment