Jun 29, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு- 3: தேன்- நோய் தீர்க்குமா? தருமா?

“அருமருந்தாகக் கருதப் படும் தேனில் கலந்துள்ள ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் நம் உடலில் அதிகப்படி யாகச் சேர்வதால் ரத்தம் தொடர்பான நோய்கள், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, பல் பாதிப்புகள் அதிகரிக்கலாம்" - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India) சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கை இது.
அருமருந்து
உலகில் பரிசுத்தமான விஷ யங்களாகச் சில பொருட்கள் கருதப் படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு முதலிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்ப தற்காகக் குழந்தைகளுக்குத் தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆயுர்வேத மருத்துவ முறை, கை மருத்துவ முறைகளில் சேர்க்கப் படும் முக்கியப் பொருள் தேன். குழந்தைகளுக்கு மருந்தைக் கலந்து கொடுக்கவும், சித்த-ஆயுர்வேத மருந்து களைக் கலந்து கொடுக்கவும் தேன் பயன்படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் மேலாகத் தேனே ஒரு சிறந்த மருந்துதான்.
இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்குப் பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது.
உற்பத்தி அதிகரிக்க
காலம்காலமாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தேனுக்கான மவுசு, இந்த நவீன காலத்திலும் குறையாமல்தான் இருக்கிறது. அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் வந்த அதிர்ச்சி அளிக்கும் செய்திதான், வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பது. தேன் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், தேனீக்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம்.
இப்படி நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உலக அளவில் மிகப் பெரிய உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. இதன் காரணமாக மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் நம் உடலில் சேரும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளால் பாக்டீரியா கிருமிகளின் எதிர்ப்பு சக்தி (Antibiotic Resistance) பெருகிவருகிறது. இதனால், நோய்த்தொற்று ஏற்பட்டு நம் உடலில் புதிய கிருமிகள் பெருகும்போது கொடுக்கப்படும் மருத்துவச் சிகிச்சையும் பலனற்றுப் போகிறது.
கட்டுப்பாடு இல்லை
கிருமிகளின் எதிர்ப்பு சக்தி (Antibiotic Resistance) அதிகரிப்பது மனித உடல்நலனுக்கு மிகவும் பேராபத் தான மூன்று விஷயங்களில் ஒன்று என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பண்ணை விலங்கு வளர்ப்பில் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
தேசிய அளவில் ஆடு, மாடு, கோழி, பன்றி, தேனீ உள்ளிட்ட பண்ணை விலங்கு வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு பற்றி எந்த ஆய்வுபூர்வமான தகவலோ, வெளிப்படையான பதிவுகளோ இல்லை. கால்நடை வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் நம் நாட்டில் கிடையாது. அதைப் போலவே உள்நாட்டில் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தேன் தொடர்பான எந்த விதிமுறைகளும் நம் நாட்டில் இன்னும் சட்டப்பூர்வமாகவில்லை.
ஐரோப்பியத் தடை
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேனுக்கு ஐரோப்பிய யூனியன் 2010 ஜூன் மாதம் தடை விதித்திருக்காவிட்டால், தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கும் பிரச்சினை உலகின் கவனத்துக்கு வந்திருக்காது.
சர்வதேச அளவில் உணவுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுக்கும் கோடெக்ஸ் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை தேனை 'இயற்கையான உற்பத்தி' என்று வரையறுத்து, தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதைத் தடை செய்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான் இந்திய ஏற்றுமதித் தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் அதிக அளவில் இருந்தபோது, அவை திருப்பி அனுப்பப்பட்டன.
அப்போது மத்திய அரசு நெடுந்தூக்கத்தில் இருந்து விழித்தது. ஏற்றுமதி செய்யப்படும் தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஏற்றுமதி கண்காணிப்பு மன்றம் (Export Inspection Council - EIC) கண்காணிப்பு வேலையைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2012 ஜூலை மாதம்தான் இந்தியத் தேனுக்கான தடையை ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொண்டது.
அதேநேரம் இந்தக் கண்காணிப்பு எல்லாமே ஏற்றுமதி தேனுக்கு மட்டும்தான் என்பதைக் கவனிக்க வேண்டும். உலகுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேயிலையின் சுவை நிரம்பிய நுனிப்பகுதி, நமக்குக் குப்பையாக விழும் டஸ்ட் டீ போலத்தான் இதுவும்.
உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனில் ஆன்ட்டி பயாட்டிக் இல்லையா, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனுக்குத் தரக் கட்டுப்பாடு இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு உடனடியாகத் தெளிவான பதில் கிடைக்கும் நிலைமை இல்லை.
அக்கறையின்மை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேன், உள்நாட்டு தேன் விற்பனையை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India) கவனிக்கிறது. அதனுடைய விதிமுறைகளும் தேனை 'இயற்கை உற்பத்தி' என்றே வரையறுக்கின்றன. ஆனால், அந்த அமைப்போ, அதன் கீழ் வரும் மற்ற அமைப்புகளோ தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கக்கூடாது என்பதற்கான விதிமுறைகளை 2010-ம் ஆண்டில் நிச்சயமாகக் கொண்டிருக்கவில்லை.
தேனுக்கு அக்மார்க் முத்திரை அவசியம் என்பதை 2008-ம் ஆண்டில் மத்திய வேளாண் அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது. ஆனால், அதில் ஆன்ட்டிபயாட்டிக் கலப்பு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏற்றுமதி கண்காணிப்பு மன்றம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்கிறது. ஏற்றுமதி செய்யப்படும் தேனில் காணப்படும் ஆன்ட்டிபயாட்டிக், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லி மாசுபாடு இருப்பது தொடர்பாக எஞ்சியுள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திட்டத்தை அந்த அமைப்பு நடைமுறைப் படுத்தியது.அதன்படி, ஆன்ட்டிபயாட்டிக் அளவு அதிகமாக இருந்தால் தேன் ஏற்றுமதி ரத்து செய்யப்படும்.
முதல் விழிப்பு
இப்படியாக, இருக்கக்கூடிய கொஞ்சநஞ்சக் கட்டுப்பாடுகளும் ஏற்றுமதி செய்யப்படும் தேனுக்கான தரக்கட்டுப்பாடுகள்தான். மேற்கண்ட அரசு அமைப்புகள் எதுவும் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனைக் கண்காணிக்கவில்லை, பரிசோதிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை.
இந்திய ஏற்றுமதித் தேனை ஐரோப்பிய யூனியன் தடை செய்தவுடன், புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment - CSE) என்ற அமைப்பு உள்நாட்டு தேனில் ஆய்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டது. அதில்தான் உள்நாட்டு தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது தொடர்பான அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. கிட்டத்தட்ட வணிகரீதியில் விற்பனை செய்யப்படும்
எல்லாத் தேனிலும் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதுதான் இதில் வயிற்றைக் கலக்குகிறது. அதைப் பற்றியும் ஆன்ட்டிபயாட்டிக்கோ, வேறு கலப்படமோ இல்லாத சிறந்த தேனை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற நிபுணர் ஆலோசனையையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

No comments:

Post a Comment