May 10, 2015

மீண்டும் தலைதூக்கும் ”கார்பைடு” அரக்கன் - கோயம்பேட்டில் 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கற்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கால்சியம் கார்பைடு கற்கள் மூலமாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்வதாகவும், ஊசி மூலம் ரசாயனம் செலுத்தி தர்ப்பூசணியின் சதை உள்ள பகுதி நிறத்தை சிவப்பாக மாற்றி விற்பனை செய்வதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், கஸ்தூரி மற்றும் ராஜா ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாம்பழம் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மற்றும் கூடைகளில் சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து மாம்பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தும் கால்சியம் கார்பைடு கற்கள் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கால்சியம் கார்பைடு கற்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று தர்ப்பூசணி கடைகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களால் அஜீரண கோளாறு, தலைவலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். ஆகவே செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்யவேண்டாம் என்ற அறிவுறுத்தல் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினர். பறிமுதல் செய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் மாம்பழம் ஆகியவை அரும்பாக்கம் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment