Apr 22, 2015

சேலத்தில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்


சேலம், ஏப்.22-
சேலத்தில் சில வியாபாரிகள் தங்களது குடோன்களில் செயற்கையான முறையில் அதாவது கார்பைடு கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் குமாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து பழக்கடைகளில் சோதனை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில், அலுவலர்கள் பாலு, திருமூர்த்தி, இளங்கோவன், ஜெகன்நாதன் ஆகியோர் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பழக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பழங்கள் வைக்கப்பட்டிருந்த கூடைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 2 பழக்கூடைகளில் மாம்பழங்களுக்கு இடையே கார்பைடு கற்கள் வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பின் அதிகாரிகள் அந்த 100 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பழங்களின் இடையே வைக்கப்பட்டிருந்த 9 கார்பைடு கற்களையும் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேர் வீதி பகுதியில் உள்ள வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி, முலாம்பழம் ஆகிய குடோன்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு அழுகிய நிலையில் இருந்த பழங்களை அப்புறப்படுத்தும் படி குடோன் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

No comments:

Post a Comment