Dec 23, 2014

வெல்ல ஆலை கொட்டகைகளில் அலுவலர்கள் திடீர் சோதனை உற்பத்தியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை கலப்பட புகார் எதிரொலி

பரமத்திவேலூர், டிச.23:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஜேடர்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையை 30 கிலோ கொண்ட சிப்பமாக கட்டி, பிலிக்கல்பாளையத்திற்கு மொத்தமாக கொண்டு வந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி தற்போது வெல்லம் உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்தி வேலூர் அலுவலர்கள் சிவநேசன், நடேசன் ஆகியோர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 10க்கும் மேற் பட்ட ஆலைகளில் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது, ஆலைகளில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையை மாதிரி எடுத்துக்கொண்டனர். அப் போது, அஸ்கா சர்க்கரை கலக்காமல் தரமாக உற்பத்தி செய்யுமாறும், மீறி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதே போல், பிலிக்கல்பாளையத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது, ஏலம் எடுக்க வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடம் அஸ்கா சர்க்கரை கலக்காத தரமான வெல்லத்தை வாங்கி விற்பனைக்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆய்வின்போது எடுக்கப்பட்ட அனைத்து உணவு மாதிரிகளும் அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். சோதனையில் ஏதேனும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு அறிக்கை பெறப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், 2 ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டதை கண்டுபிடித்து `சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: