Dec 23, 2014

சேலத்தில் மசாலா பொருட்களில் கலப்படம் 20 லட்சம் மதிப்புள்ள 500 மூட்டை சோம்பு, சீரகம், மிளகு பறிமுதல் குடோனுக்கு அதிரடி சீல்


சேலம், டிச.23&
சேலத்தில் சோம்பு, சீரகம், மிளகு ஆகிய மசாலா பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 500 மூட்டை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள மொத்த வியாபாரிகளின் குடோனில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், சேலம் அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்த கீரித் என்பவரின் குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர் சோம்பு, கடுகு, சீரகம், மிளகு உள்ளிட்ட பொருட்களை குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, பாலிஷ் செய்து, செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் உள்ள குடோனில் இருப்பு வைத்து விற்பனை செய்து வந்தார். கடந்த 10 வருடங்களாக சேலத்தில் இந்த தொழிலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது குடோனில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அனைத்து பொருட்களிலும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோம்பில் கூடுதல் நிறம் கிடைக்க பச்சை நிற ரசாயன பவுடரை கலந்து முதல் ரகம் போன்று விற்பனை செய்து வந்துள்ளார். மிளகில் பப்பாளி விதைகளை கலந்து கலப்படம் செய்து விற்பனை செய்துள்ளார். மேலும் சீரகம் மற்றும் கடுகில் அதே போன்று பொருட்களை கலந்திருப்பதும், வெந்தயத்தில் வெள்ளை நிற ரசாயன பவுடரை பயன்படுத்தி கூடுதல் நிறமேற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரது குடோனில் இருந்த 500 மூட்டை சோம்பு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கலப்பட பொருட்களை விற்பனை செய்ததால், குடோனை பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், “ஜனவரி மாத துவக்கத்தில் புதிய பொருட்கள் விற்பனைக்கு வரும். புதிய பொருட்கள் சில நாட்களில் விற்பனைக்கு வர உள்ளதால் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தோம். மேலும் பொருட்களில் கலப்படம் செய்வதாகவும் எங்களுக்கு புகார்கள் வந்தது. ரசாயன பொருட்களால் கலப்படம் செய்த உணவு பொருட்களை உட்கொண்டால், உடல் நலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படும்.
அல்சர் போன்ற நோய்கள் உண்டாகும். இங்கிருந்து சோம்பு, சீரகம் உள்ளிட்ட பொருட்கள் மாதிரி எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடிப்படையில், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். கலப்படம் செய்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள மசாலா பொருள் குடோனில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். கீழ்படம்: கலப்படம் செய்த பொருட்கள் மற்றும் கலப்படம் செய்யப்படாத பொருட்கள் தனித் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1 comment:

  1. பாராட்டுக்குரியது . அபராதம் / சட்ட நடவடிக்கை தொடர வேண்டும்

    ReplyDelete