Dec 24, 2014

சேலத்தில் கலப்படம் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 500 மூட்டை சீரகம், சோம்பு, மிளகு பறிமுதல் குடோனுக்கு ‘சீல்‘ வைத்து அதிகாரிகள் அதிரடி



சேலம், டிச.24-கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, மிளகு போன்ற பொருட்களில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.15 லட்சம் மதிப்பிலான 500 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
மசாலா பொருட்களில் கலப்படம்
சேலம் செவ்வாய்பேட்டை மாநகரில் முக்கிய வர்த்தக பகுதியாகும். சேலம் மாநகரில் இருந்து வெளிநாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு நவதானியம், மசாலா பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.செவ்வாய்பேட்டை பகுதியில் நவதானியங்கள் மற்றும் மசாலா பொருட்களை சப்ளை செய்யக்கூடிய பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் இருந்து சிவதாபுரம் செல்லும் வழியில் மூலப்பிள்ளையார் கோவில் அருகே ஏ.கே.கார்பரேசன் என்ற பெயரில் மசாலா அரவை குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இதை குஜராத் மாநிலம் ஊஞ்ஞா கிராமத்தை சேர்ந்த கிரீக் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மசாலா பொருட்களில் கலப்படம் செய்து, அவற்றை மூட்டையாக கட்டி, வெளிமாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
குடோனில் ஆய்வு
அதைத்தொடர்ந்து டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருமூர்த்தி, இளங்கோவன் மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பச்சியப்பன், ஜெகநாதன் ஆகியோர் மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள கலப்பட குடோனுக்கு சென்றனர்.குடோனுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நயமான கடுகு, மிளகு, வெந்தயம், சீரகம், சோம்பு ஆகியவை ஒரு பகுதியிலும் அவற்றில் கலப்படம் செய்யக்கூடிய ஆயில், கலர் பவுடர், வெள்ளை பவுடர், பப்பாளி விதை போன்ற ஒரு பொருள் ஆகியவற்றை தனியாக ஒரு வாளியில் கலக்க தயார் நிலையில் இருந்தது. மேலும் கலப்படம் செய்த மசாலா பொருட்கள் குடோனில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவற்றை பாலீஸ் செய்வதற்காக ஒரு எந்திரமே குடோனில் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மசாலா பொருட்களில் இருந்து ஆய்வுக்காக மாதிரி சேகரிக்கப்பட்டது.
500 மூட்டைகள் பறிமுதல்-சீல் வைப்பு
அதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், குடோனில் கலப்படம் செய்து உற்பத்தியான சீரகம், சொம்பு, மிளகு, கடுகு, வெந்தயம் போன்ற 500 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து குடோன் இயங்காத வகையில், அவற்றை பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். உணவு பாதுகாப்பு நியமன ஆணையர் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னரே, கலப்பட குடோன் ஆய்வு செய்து ‘சீல்‘ வைக்கப்பட்டதாக டாக்டர் அனுராதா தெரிவித்தார். 

கலப்பட மசாலா உணவு பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பையும் புற்றுநோயையும் உருவாக்க கூடியது
சேலம் செவ்வாய்பேட்டையில் கலப்படம் செய்து மசாலா பொருட்களை உற்பத்தி செய்த குடோன் சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 500 மூட்டை கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நிருபர்களிடம் கூறியதாவது;- 
பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் மசாலா உணவு பொருட்களில் கலப்படம் செய்துள்ளனர். அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் மிளகில் மினரல் ஆயில் கலந்து அதை நன்றாக பாலீஸ் செய்துள்ளனர். மேலும் வழக்கமாக பப்பாளி விதையை மிளகுக்கு பதில் கலப்படம் செய்வார்கள். ஆனால், இதில் புதிதாக ஒன்றை மிளகுபோல கலப்படம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக பிரேத்யேக எந்திரம் பயன்படுத்தி உள்ளனர். சோம்புவில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் அனுமதிக்கப்படாத பச்சைநிற பவுடர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. வெந்தயத்தில் ஒருவித கெமிக்கல் பயன்படுத்தி பாலீஸ் செய்தும் சில பொருட்களையும் கலப்படமும் செய்துள்ளனர். சீரகத்திலும் ஒருவித சக்கைபோன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. நயமான பொருட்களை குஜராத் மாநிலத்தில் இருந்து அதன் உரிமையாளர் கிரீத் வாங்கி உள்ளார். பின்னர் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களை டெல்லியில் வாங்கி இருக்கிறார். பின்னர் அவற்றை சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள குடோனுக்கு லாரி மூலம் கொண்டு வரச்செய்து இங்கு கலப்படம் செய்து தமிழகம் உள்பட வெளிமாநிலங்களுக்கும் மூட்டை மூட்டையாக சப்ளை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 500 மூட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். 
இந்த கலப்பட பொருட்கள் உணவில் சேர்க்கப்படுவதால் மனிதனின் உடல் உறுப்புகள் பாதிப்படையும், மேலும் புற்றுநோய் உருவாக்கும் ஆற்றல் கொண்டதாகும். தற்போது கலப்பட மசாலா பொருட்கள் சேகரிக்கப்பட்டு, சேலம் உடையாப்பட்டியில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்ததும் குடோன் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment