Sep 20, 2014

கலப்பட ஈர மாவுக்கு கடும் எதிர்ப்புஜவ்வரிசி உற்பத்தி அதிரடி நிறுத்தம்

நாமக்கல்:மாவட்ட நிர்வாகம், ரசாயனம் கலந்த ஈரமாவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, ஜவ்வரிசி உற்பத்தி செய்வதில்லை' என, தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. கிழங்கு மூலம் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் உள்ளன.
ஜவ்வரிசி உற்பத்தியில், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறையை பின்பற்றாமல், அரசின் உரிமம் பெறாமல், ஈர மாவு விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு கலப்படம் செய்யப்பட மாவு, ஆத்தூரில் இருந்து நாமக்கல் மாவட்டங்களுக்கு அதிக அளவில் கொண்டுவரப்பட்டது.
மக்காச்சோளம் கலந்த ஜவ்வரிசியை மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ள உரிமையாளர்கள், வாடகைக்கு மில்களை பிடித்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நடத்திய ஆய்வில், அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதும், மக்காச்சோளம் கலந்து மாவு தயாரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், ஆத்தூரில் இருந்து ரசாயனம் கலந்த ஈர மாவு லோடு, நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில் உள்ள, இரண்டு ஜவ்வரிசி ஆலைக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளது. தகவல் அறிந்த, தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத்தினர், விவசாயிகள் இரண்டு லாரிகளையும் சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த ஆர்.டி.ஓ., காளிமுத்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர். ஈரமாவு கலப்படம் குறித்து, கலெக்டர் தலைமையில், கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
தமிழ்நாடு மரவள்ளி கிழங்கு இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துலிங்கம், செயலாளர் மணிசேகரன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கூறியதாவது:
ஜவ்வரிசியில் மக்காச்சோளம், சாக் பவுடர் போன்ற எந்த மூலக்கூறும் கலக்காத, இயற்கை முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும். அதன்படி, 90 சதவீத ஆலைகள் இயற்கை முறையில் ஜவ்வரிசி உற்பத்தி செய்து வருகின்றனர்.கலப்படத்துக்கு அடிப்படை மூலக்காரணமான ஈரமாவு, ஆத்தூர் பகுதியில் இருந்து, இரண்டு லாரிகளில் செல்லப்பம்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அவற்றை சிறைபிடித்து, விசாரணைக்காக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஈரமாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்வதால், ஒரு மூட்டைக்கு, 500 ரூபாய் வரை குறைந்துள்ளது.மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு துறையும், ஈரமாவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, ஜவ்வரிசி உற்பத்தி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment