Sep 20, 2014

தலையை துண்டிப்போம் பெண் அதிகாரிக்கு மிரட்டல் - சேலத்தில் பரபரப்பு

சேலம், செப். 20:
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் தலையை துண்டிப்போம் என மர்மநபர் மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக அனுராதா கடந்த இரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். உணவு பொருட்களில் கலப்படம் தடுப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படத்தை கண்டுபிடித்து சீல் வைத்தார். அதேபோல் கலப்பட வெல்லம் தயாரித்தவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அனுராதாவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், “சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவாநகர் 4வது வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளோம். அதேபோல் 4வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து கொல்வோம். அனுராதா, உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். உன்னால் முடிந்தால் தடுத்துப் பார். எங்களுக்கு எதிராக யார் வந்தாலும், அவர்களை உயிரோடு விடமாட்டோம். கண்டிப்பாக ஜீவாநகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுதப்பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால், நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை“ என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம், டாக்டர் அனுராதா தெரிவித்தார். பின்னர் கலெக்டரின் அறிவுரையின் பேரில் போலீசில் நேற்று, அனுராதா புகார் அளித்தார். மேலும் இம்மிரட்டல் கடிதம், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கன்னங்குறிச்சி போலீசில் நேற்று காலை புகார் கொடுத்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவாநகர் 4வது வார்டு பகுதியில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2 நாட்களில் 20 நாய்கள் விஷத்தால் இறந்திருப்பது உறுதியானது. இந்த மிரட்டல் கடிதம் பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள், பீதியில் உறைந்தனர்.


No comments:

Post a Comment