Sep 11, 2014

மைதாமாவு, ஜிப்சம் கலந்து ‘கலப்பட வெல்லம் தயாரிக்கும் வியாபாரிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்’ உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் விவசாயிகள் முறையீடு

சேலம், செப்.11-மைதாமாவு, ஜிப்சம் கலந்து வெல்லம் தயாரிக்கும் கலப்பட வியாபாரிகளிடம் இருந்து காப்பாற்றக்கோரி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
திரண்ட விவசாயிகள்
சேலம் மாவட்டம் கருப்பூர் மண்டல வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் நேற்று காலை, சேலம் நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். 
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-கலப்பட வெல்ல வியாபாரிகள்சேலம் மாவட்டம் கருப்பூர், செங்கரடு, வெள்ளாளப்பட்டி, வட்டக்காடு பகுதியில் கரும்பு சாகுபடி செய்து விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் பயிரிட்டு, சொந்த கரும்பாலையில் வெல்லம் காய்ச்சி உற்பத்தி செய்து, சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம். இதில் நாங்கள் எந்த கலப்படமும் செய்வதில்லை.ஆனால், காமலாபுரம், ஒட்டத்தெரு, நாலுகால் பாலம், முத்துநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கரும்பாலை வைத்து வெல்லம் தயாரிப்பவர்கள் கரும்பை விலைக்கு வாங்கி வெல்லம் உற்பத்தி செய்து வருகிறார்கள். இவர்கள் சொந்த நிலத்தில் கரும்பு உற்பத்தி செய்யாமல், அதிக லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தில் கலப்படம் செய்து வெல்லம் தயாரிக்கிறார்கள். அஸ்கா சர்க்கரை, மைதாமாவு, ஜிப்சம், சபோலைட் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து கலப்பட வெல்லம் தயாரித்து மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
எங்களை காப்பாற்றுங்கள்
நாங்கள் தயாரிக்கும் வெல்லம், கலப்படம் இல்லாதது. அதனால், வெல்லத்தின் நிறம் சற்றே மங்கலாகத்தான் இருக்கும். விலையும் குறைவாக போகிறது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கிறது. கலப்பட வியாபாரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.எனவே, கலப்பட வெல்லம் தயாரிக்கும் இடத்தில் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கவும், கலப்பட வெல்ல வியாபாரிகளிடம் இருந்து காப்பாற்றி, எங்கள் தொழிலுக்கு பாதுகாப்புத்தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரும்பு வெட்ட தயக்கம்
கலப்பட வெல்லம் தயாரிப்பால் பாதிக்கப்பட்ட கருப்பூர், செங்கரடு, வெள்ளாளப்பட்டி, வட்டக்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள கரும்புகளை வெட்டி வெல்லம் காய்ச்சவே தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால், சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டிற்கு தரமான போதிய வெல்லம் வரவில்லை என்று கருப்பூர் மண்டல வெல்லம் தயாரிக்கும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment