Sep 16, 2014

குரோம்பேட்டையில் 45 கடைகளில் சோதனை புகையிலை பொருள் பறிமுதல் வியாபாரிகள் மறியல்



குரோம்பேட்டை, செப்.16:
குரோம்பேட்டையில் 45 கடைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை கண்டித்து வியாபாரிகள் மறியல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அத்துறையின் காஞ்சிபுரம் மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் தலைமையில் அதிகாரிகள் நேற்று குரோம்பேட்டை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அழித்தனர்.
இதுகுறித்து, பல்லாவரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் கூறியதாவது: குரோம்பேட்டை ராதா நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள 45 கடைகளில் சோதனை நடத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், தொடர் சோதனை நடத்தப்படும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
அதிகாரிகள் சோதனை செய்ய வந்தபோது தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த கடைக்காரர்கள் சிலர், கடையை மூடிவிட்டனர். அப்போது கடையை திறக்கும்படி அதிகாரிகள் கூறினர். அவர்கள் மறுத்தனர். பின்னர், அந்த கடைகளுக்கு, அதிகாரிகள் சீல் வைக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புகையிலை பொருட்களை கைப்பற்ற அதிகாரிகள் வந்தபோது பூட்டியிருந்த கடைக்கு சீல் (உள்படம்) வைத்தனர். இதை எதிர்த்து வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment