Jul 1, 2014

ஆனி திருமஞ்சன திருவிழா கடைகள், அன்னதான அரங்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு


சிதம்பரம், ஜூலை 1:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 25ம் தேதி முதல் ஆனித் திருமஞ்சன திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி கோயில் அருகே உள்ள குளிர்பானக்கடைகள் மற்றும் தனியார் அன்னதானம் செய்யும் இடம் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிதம்பரம் நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். குளிர்பான கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா? தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
மேலும் கோயில் அருகே உள்ள தனியார் அன்னதானம் செய்யும் இடத்தையும், வழங்கப்படும் அன்னதானம் தரமாக உள்ளதா? என ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழாக்கள் நடக்கும் நாட்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும்.
அன்னதானம் செய்பவர்கள் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி பெற்ற பின் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும். சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment