Jul 1, 2014

உணவு நிறுவனங்களுக்கு கெமிக்கல் சப்ளை செய்தால் கடும் நடவடிக்கை

சேலம்: ""கெமிக்கல் விற்பனையாளர்கள், உணவு சம்பந்தமான நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யக்கூடாது,'' என, வியாபாரிகளிடம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில், 250 ஜவ்வரிசி, அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. சில ஜவ்வரிசி ஆலைகளில் தாயரிக்கப்படும் ஜவ்வரிசிகளில், கெமிக்கல் கலப்பு செய்து விற்பனை செய்து வருவதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தெரியவந்தது. அதையடுத்து, தரமற்ற முறையில், கிழங்கு மில்களில் கிடைக்கும் மீதமான கிழங்கு மாவுகளை விலைக்கு வாங்கி வந்து, மக்காச்சோள மாவு கலப்படம் செய்து, அவற்றை வெண்மையாக்குவதற்கு, சோடியம் ஹையோ குளோரய்டு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற கெமிக்கல் பயன்படுத்திய, ஜவ்வரிசி ஆலைகளுக்கு, "சீல்' வைத்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், கெமிக்கல் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கான கூட்டம், நாட்டாண்மை கழக கட்டித்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா தலைமையில், நேற்று நடந்தது. சேலம் மாவட்ட கெமிக்கல் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர்கள் சம்பத், செயலாளர், முஸ்தபா, பொருளாளர் மணிசாய்கரன் உள்பட விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா பேசியதாவது:
அரசு உத்தரவுபடி, 19 வகையான கெமிக்கல் வியாபாரம் செய்பவர்கள், டி.ஆர்.ஓ.,விடம் முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். கெமிக்கல் வாங்குபவர்கள் பற்றி, முழுமையான தகவல் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதுகுறித்து, அலுவலர்கள் சோதனைக்கு வரும்போது, முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உணவு சம்பந்தப்பட்ட துறைக்கு, கெமிக்கல் வியாபாரம் செய்யக்கூடாது. அதை மீறி வியாபாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், ஜவ்வரிசி ஆலைகளில், கெமிக்கல் பயன்பாட்டை முழுமையாக தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு பேசினார். வியாபாரிகள், விற்பனையாளர்கள் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment