Jul 2, 2014

மானாமதுரை பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை



மானாமதுரை, ஜூலை.2:
மானாமதுரை முழுவதும் தரமற்ற குடிதண்ணீர் பாக்கெட்டுகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இந்தாண்டு கோடையை மிஞ்சும் அளவுக்கு கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மானாமதுரையில் புதுபஸ்ஸ்டாண்ட், அண்ணாசிலை, காந்திசிலை, குண்டுராயர் வீதி, பைபாஸ் ரோடு, பழைய பஸ்ஸ்டாண்ட், டாஸ்மாக்கடை அருகே உள்ள தனியார் பார்கள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை தாராளமாக நடக்கிறது.
இங்கு விற்கப்படும் குடிநீர் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதிகள் இல்லை. புதுப்புது பெயர்களில் தயாரிக்கப்படும் இவற்றில் நிறுவனத்தின் முகவரியோ, தொலைபேசி எண்களோ இருப்பதில்லை. இந்த தண்ணீர் பாக்கெட்டுகளை குடிப்பவர்களுக்கு குடல், இரைப்பையில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் எளிதில் பரவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனை சுகாதாரத்துறையினரும் கண்டு கொள்வதில்லை.
இது குறித்து தனியார் ரத்த பரிசோதனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், குடிசை தொழிலாக தயாரிக்கப்படும் குடிநீர் பாக்கெட்டுகளில் கிருமிகள் சுத்தம் செய்யும் யூவி முறை, மெம்பரேன்கள் தரமற்றதாக இருக்கின்றன. குடிநீர் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கவர்கள் தரமற்றதாக உள்ளன. மேலும் பெரிய கேன்களில் விற்கப்படும் தண்ணீரும் சுகாதாரமானதாக இல்லை. ரூ.30 க்கு விற்கப்படும் இந்த கேன்கள் மிகவும் அசுத்தமாக இருக்கிறது. இந்த கேன்களை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்வதில்லை. பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் பெரும்பாலும் காற்று மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவும். அதனால் சுகாதார அலுவலர்கள், உணவுபாதுகாப்பு அலுவலர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை பரிசோதிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment