Jul 25, 2014

செல்லப்பம்பட்டியில் ஜவ்வரிசி உற்பத்தியில் ரசாயனம் கலந்த ஆலையை மூட உத்தரவு அதிகாரிகள் சோதனையில் அதிரடி


நாமக்கல், ஜூலை 25:
நாமக்கல் அருகே ரசாயனம் கலந்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்த ஆலையை அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல் தாலுகா செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில், ரசாயனக்கலப்படம் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து, மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை, நியமனஅலுவலர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுவாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி மற்றும் உதவிபொறியாளர் ரங்கராஜ், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சிவநேசன், நரசிம்மன், ராமசாமி, ராமச்சந்திரன் ஆகியோர்கள் அடங்கிய கண்காணிப்புகுழுவினர் ஜவ்வரிசி ஆலைகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள 42 ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் நேற்று முன் தினம் இரவு விடியவிடிய சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரசாயனம் கலப்படம் செய்யும் வகையில் ஒரு ஆலையில் பிரஷர்மோட்டார் பம்பு ஒரு பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஆலையை உடனடியாக மூடும் படி உத்தரவிட்டனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
செல்லப்பம்பட்டியில் ஏற்கனவே ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஜவ்வரிசி தயாரிப்பில் ரசாயனக்கலப்படம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரஷர்மோட்டார் பம்புகளை அப்புறப்படுத்தி இயற்கையான முறையில் ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின்னரும் இரவு நேரங்களில் ரசாயனக்கலப்படத்திற்காக பிரஷர் மோட்டார் பம்புகளை பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும்
செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள 42 ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் 16 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் தற்போது தான் இயங்க ஆரம்பித்துள்ளன. அங்கு உணவுமாதிரிகள் எதுவும் இல்லை. 12 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. ஏற்கனவே. இயக்கத்திலுள்ள 14 ஜவ்வரிசி ஆலைகளில் 14 உணவுமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரஷர் பம்ப் வைத்திருந்த ஒரு ஜவ்வரிசி ஆலை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உணவு பாதுகாப்பு அலுவலர் கூறினார்.

No comments:

Post a Comment