Jun 5, 2014

நாடு முழுவதும் பள்ளி கேன்டீன்களில் நொறுக்கு தீனி விற்க தடை-மத்திய அரசு அதிரடி திட்டம்

புதுடெல்லி, ஜூன் 5:
மாணவர்களின் உடல் நலத்தை கெடுக்கும் நொறுக்குத் தீனிகளை பள்ளி கேன்டீன்களில் விற்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளின் உடல் நலத்தை கெடுக்கக் கூடிய விதவிதமான நொறுக்குத் தீனிகளும், குளிர்பானங்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றில் ருசியை அதிகரித்து குழந்தைகளை ஈர்ப்பதற்காக, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் வருகின்றன. எனவே, நொறுக்குத் தீனி விற்பனையை கட் டுப்படுத்தவும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்யவும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி அதிரடி திட்டத்தை அமல்படுத்த பரிசீலித்து வருகிறார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க தடை விதிப்பது பற்றி மேனகா காந்தி பரிசீலித்து வருகிறார். “பள்ளி கேன்டீன்களில் மாணவர்களுக்கு தரமான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைக்க செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதோடு, நொறுக்குத் தீனிகளில் கலக்கப்படும் ஆபத்தான பொருட்கள் பற்றியும், இவற்றை சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய தீங்குகள் பற்றியும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றி மத்திய சுகாதாரம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களுடன் மேனகா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளிகளில் அமல்படுத்தப்படும் மதிய உணவு திட்டம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், பள்ளி வளாகங்களில் பாதுகாப்பான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறை உருவாக்கும் முயற்சியில் சுகாதார அமைச்சகம் ஈடுபட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment