Jun 4, 2014

பழக்கடை கிட்டங்கிகளில் அதிகாரிகள் சோதனை

புதன், ஜூன் 04,2014, 
நெல்லை சந்திப்பு பகுதி பழக்கடை கிட்டங்கிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அப்போது மெழுகு தடவிய ஆப்பிள் பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. 
இதையடுத்து உணவு பாதுகாப்பு கமிஷனர் குமார் ஜெயிந்த் உத்தரவுப்படி, மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் அறிவுரைப்படி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.கருணாகரன் தலைமையில் அதிகாரிகள் நெல்லை சந்திப்பு பகுதிகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கரலிங்கம், காளிமுத்து, கலியனாண்டி, இப்ராகிம், ரமேஷ், அன்பழகன், முத்துகுமாரசாமி, நாகராஜன், மகராஜன், கிருஷ்ணன் ஆகிய 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் பகுதியில் உள்ள பழக்கடை கிட்டங்கிகளில் நேற்று காலை சோதனை செய்தனர். 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 10–க்கும் மேற்பட கிட்டங்கிகளில் சோதனை நடத்தினர்.
மெழுகு தடவிய ஆப்பிள்
சோதனையின் போது, மெழுகு தடவி விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 17 கிலோ ஆப்பிள், அழுகிய நிலையில் 25 கிலோ மாம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பழங்கள் கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் கூறும் போது, “கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு இருக்கிறதா? என சோதனை செய்தோம். கார்பைடு கல் வைத்து பழங்களை பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. 
எத்திலின் கியாஸ் மற்றும் எத்திலின் திரவம் வைத்து பழுக்க வைக்கலாம். எனவே மேற்கண்ட திரவங்களை வைத்து பழுக்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆப்பிள் பழங்கள் மெழுகு தடவி விற்பனை செய்யக்கூடாது என கிட்டங்கி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்“ என்றார்.

No comments:

Post a Comment