Feb 6, 2014

உணவுபாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் கீழ் சாலையோர உணவகங்களை பதிவு செய்ய உத்தரவு சென்னையில் பணி தொடக்கம்

சென்னை, பிப்.6-உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயசட்டத்தின் கீழ் சாலையோர உணவகங்கள் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப்பணி சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறினர்.உணவு பாதுகாப்பு சட்டம்அனைத்து உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்யும் பணியை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தொடங்கி உள்ளது.இதற்காக சென்னை அண்ணாநகரில் சாலையோரங்களில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், ஜூஸ் கடைகள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் அனைவரையும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் நேற்று நேரடியாக இந்த கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு அளித்தனர்.
6 மாத காலம் நீட்டிப்பு
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எஸ்.லட்சுமிநாராயணன் கூறியதாவது:-உணவு பாதுகாப்பு சட்டம் - 1954 தற்போது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் படி உணவகங்கள் மற்றும் அதுதொடர்பாக தொழில் செய்துவருபவர்கள் முறையாக உரிமம் பெறுவதுடன், பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு கடந்த 4-ந்தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது மத்திய அரசு மேலும் 6 மாதத்திற்கு கால நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்து உணவு தொழில் செய்துவருபவர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் படி உணவகங்கள் சுத்தமாகவும், முறையாகவும் பராமரிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு அளித்து வருகிறோம். பதிவு, உரிமம் அவசியம்
உணவுபாதுகாப்பு மற்றும் தரநிர்ணயசட்டத்தின் படி, உணவு தொழிலில் ஈடுபடுபவர்கள் உரிமம் பெற வேண்டும். அதில் சற்று விதிவிலக்காக ஆண்டு வருமானம் ரு.12 லட்சத்திற்கு மேல் இருந்தால் உணவு பாதுகாப்பு துறையில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி கண்டிப்பாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். ரூ.12 லட்சத்திற்கு குறைவாக இருப்பவர்கள் ரூ.100 செலுத்தி உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.சென்னையை பொருத்தவரையில் 12 ஆயிரம் பேர் உரிமம் பெறுபவர்களாகவும், 23 ஆயிரம் பேர் பதிவு செய்பவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் 10 ஆயிரம் பேர் சாலை ஓர உணவகங்களை நடத்துபவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் முறையாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
200 பேர் பதிவு
இதற்காக அண்ணாநகரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வில் 200 பேர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தண்டையார்பேட்டை, சவுகார்பேட்டை, வேளாச்சேரி, அடையார், சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் பகுதிகளிலும் விழிப்புணர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உரிமம் மற்றும் பதிவு செய்யாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்படலாம்.உணவு பாதுகாப்பு சட்டம் - 1954ன் கீழ் பதிவு செய்துள்ள உணவகங்கள் தற்போது புதிய சட்டமான உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின் கீழ் முறையாக தங்கள் உரிமத்தை மாற்றம் செய்திருக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல் பெற விரும்புபவர்கள் 86828-68400 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றம் தேவை
சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.டி.ஸ்ரீனிவாசன் கூறும்போது உரிமம் பதிவு செய்ய மத்திய அரசு காலகெடு வழங்கி உள்ளது. சிறிய தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தில் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment