Feb 6, 2014

சங்க செயலாளர் கேள்வி அரசு உத்தரவை செயல்படுத்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மீது வணிகர்கள் குறை கூறுவது ஏன்?

நாகை, பிப். 6:
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் சங்க மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 
சமீப காலமாக வணிகர் சங்கங்களின் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் தொடர்பாக வெளிவரும் செய்திகளில் தமிழகத்தில் பணியாற்றி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைவரையும் விரோதிகளாக சித்தரிக்கும்போக்கு கையாளப்பட்டு வருகிறது. 
உணவு வணிகம் செய்வோர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற வருகிற 4ந்தேதி கடைசி நாள் என இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
இது குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உயர் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளனர். இத்தகவலை உணவு வணிகத்தில் ஈடுபட்டிருப் போரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உணவு பாதுகாப்பு அலுவலர்களின் வேலையாகும். 
உணவு வணிக நிறுவனங்களின் உரிமம், பதிவு தொடர்பாக, அரசு உத்தரவின்றி சுயமாக எதையும் செயல்படுத்த உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை. உண்மை அவ்வாறு இருக்கும்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தனி ராஜ்ஜியம் நடத்துவதாக கூறுவதும், உரிமம் தொடர்பான தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தி, இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக கூறுவதும் மன வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. 
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிற அதே நேரத்தில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மீதும் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment