Nov 23, 2013

ஆத்தூர் பகுதியில் ஜவ்வரிசி, கிழங்கு மாவு ஆலைகளில் அதிரடி ஆய்வு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், நவ.22-சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு ஆலைகளில் திராவகம் மற்றும் ரசாயன பவுடர் கலப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோவிந்தராஜ், புஷ்பராஜ், சுந்தர்ராஜன், இளங்கோவன், முனுசாமி ஆகியோர் நேற்று காட்டுகொட்டாய், சதாசிவபுரம், அம்மம்பாளையம், நரிகுறவர் காலனி, முட்டல், பைத்தூர்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு ஆலைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.அப்போது முட்டலில் உள்ள ஒரு ஜவ்வரிசி ஆலையில் சோதனை நடத்த சென்றபோது, ஆலையின் உரிமையாளருக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இருப்பினும் 2 ஆலைகளில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உணவு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறுகையில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு ஆலைகளில் சோதனை நடத்தினோம். இதில் 2 ஆலைகளில் இருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆலையில் சோதனை நடத்த சென்றபோது ஆலையின் உரிமையாளர் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார். 
இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து கூறியுள்ளோம். இருப்பினும் ஆத்தூர் போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஆலையிலும் உணவு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கலப்படம் நடப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment