Sep 5, 2013

சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக போலி டீ தூள் தயாரித்த நிறுவனம், விற்பனையாளர் மீது கோர்ட்டில் வழக்கு உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

சேலம், செப்.5-தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக போலி டீ தூள் தயாரித்த நிறுவனம் மற்றும் விற்பனையாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு உத்தரவு வந்துள்ளது.
போலி டீ தூள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் போலி டீ தூள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து போலி டீ தூள் ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த போலி டீ தூளை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் மாதிரிக்காக அங்கிருந்து டீ தூளை எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு தொடர உத்தரவு
தற்போது இந்த ஆய்வின் முடிவு வந்துள்ளது. இதில் பொதுமக்கள் இந்த டீ தூளை உபயோக தகுதியற்றது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த டீ தூளை தயாரித்த நிறுவனம் மீதும், போலி டீ தூளை விற்ற விற்பனையாளர் மீது கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் குமார் ஜெய்ந்த் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
சேலம் கோர்ட்டில்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறும் போது, ‘ஓமலூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மீதும், இந்த டீ தூளை தயாரித்த சென்னையை சேர்ந்த நிறுவனம் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர ஆணையாளரிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை மூலம் தமிழ்நாட்டில் முதல் முறையாக கோர்ட்டில் வழக்கு தொடர்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது ஒரு சில நாட்களில் சேலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் அதே நபர் செல்வத்தின் வீட்டில் நேற்று நடந்த சோதனையின் போது 100 கிலோ போலி டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது’ என்று கூறினார்.

No comments:

Post a Comment