Sep 5, 2013

814 குடிநீர் நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கு அக்டோபர் 7க்கு ஒத்திவைப்பு

சென்னை, செப்.5:
குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்த வழக்கு அக்டோபர் 7ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கடந்த மார்ச் மாதம் தானே முன்வந்து குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, நேற்று நீதிபதி சொக்கலிங்கம் விசாரணை செய்தார்.
அப்போது மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் பாலாஜி, குடிநீர் விற்பனை ஆலை களை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ததில் 814 குடிநீர் விற்பனை நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், 153 நிறுவனங்கள் அனுமதி பெற்றும் செயல்படுவதாக தெரிவித்தார்.
814 குடிநீர் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு 2011ல் உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் பொதுப்பணி துறை சார்பாக நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துவது குறித்து வழக்கு தொடரப்பட்டது, அந்த வழக்கில் 31&11&2011 அன்று வர்த்தக நோக்கோடு நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது என தீர்ப்பு கூறப்பட்டது. அதன் அடிப்படையில் 814 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று வாரிய உறுப்பினர் செயலர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை அக்டோபர் 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இது தவிர ஹெர்பல் வாட்டர் விற்பனை நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், உணவு பாதுகாப்பு தரநிர்ணய உதவி ஆணையர் செல்வா நேற்று ஆஜராகி இந்த கம்பெனிகள் ஒரு ஆண்டில் எவ்வளவு குடிநீரை விற்பனை செய்துள்ளனர். அதன் அளவீடு பொறுத்து மத்திய அரசின் தலைமையின் கீழ் வருகிறதா, மாநில அரசின் தலைமையின் கீழ் வருகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டியுள்ளது என கூறினார். இந்த வழக்கையும் நீதிபதி, அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment