Sep 3, 2013

ஒரு வாரத்தில் 450 குடிநீர் மாதிரிகளை எடுத்தது வாரியம்: பசுமை தீர்ப்பாய எச்சரிக்கையால் அதிரடி

பசுமைத் தீர்ப்பாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒரு வாரத்தில், மாநிலம் முழுவதும், 450க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்களில், குடிநீர் மாதிரிகளைப் பரிசோதனைக்கு எடுத்துள்ளது. நாளை வழக்கு விசாரணைக்கு வருவதால், அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அனுப்பும் குடிநீர் தரமாக இல்லை என, தெரிய வந்ததால், சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், தானாக முன் வந்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டு, தர பரிசோதனைக்குப் பின், செயல்பட அனுமதிக்கப்பட்டன. இதுபோன்று, "தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்களில் குடிநீர் மாதிரி எடுத்துப் பரிசோதித்து, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்' என, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. கடந்த வாரம் (ஆக., 26) நடந்த விசாரணையின் போது, மூன்று மாவட்டங்களில் மாதிரி எடுத்ததாகக் கூறிய வாரிய அதிகாரிகள், அதன் முடிவுகளைத் தெரிவிக்கவில்லை. போதிய அவகாசம் கொடுத்தும், மாநிலம் முழுவதும் குடிநீர் மாதிரிகள் எடுக்காததால் அதிருப்திடைந்த தீர்ப்பாயம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர், நேரில் ஆஜராக உத்தரவிட்டது. "மேலும், செப்., 4 அன்று நடக்கும் விசாரணையின் போது, மாதிரி முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், வாரியத்திற்கு, 1 லட்சம் ரூபாயும், மாவட்ட பொறியாளர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரித்தது.
சுறுசுறுப்பு:
பசுமைத் தீர்ப்பாய எச்சரிக்கையை அடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுறுசுறுப்படைந்தது. குடிநீர் மாதிரிகளை எடுக்க, மாவட்ட பொறியாளர்கள் உத்தரவிடப்பட்டனர். மாநிலம் முழுவதும், ஒரு வாரத்தில், அவசர அவசரமாக, 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகள் எடுத்து, தர பரிசோதனைக்காக, உணவுப் பாதுகாப்புத் துறையிடம் தரப்பட்டு உள்ளது. இவற்றை உடனுக்குடன் பரிசோதித்து முடிவுகள் அறிவிக்கும் அளவுக்கு, உணவுப் பாதுகாப்புத் துறையில் போதிய ஆய்வுக் கூட வசதி இல்லை. ஒரு மையத்திலேயே ஆய்வுகள் நடப்பதால், இதன் முடிவுகள் கிடைக்க, ஒரு மாதம் ஆகும் என, தெரிகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்ட, 335 மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு உள்ளன. இந்த முடிவுகளை, நாளை நடக்கும் விசாரணையின் போது சமர்ப்பித்து, நிலைமையை ஓரளவு சமாளிக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளது.

No comments:

Post a Comment