Sep 3, 2013

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் பான்பராக் பறிமுதல்

தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பான்பராக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி, செப்.3:
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்த வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பான்பராக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்து அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பான்பராக் பொருட்கள் மறைமுகமாக சப்ளை செய்யப்படுவதாக கலெக்டர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் உணவு கட்டுப்பாட்டு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீசசந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன், பொன்முத்துஞானசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் திருச்செந்தூர், குரும்பூர், ஏரல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் சிலர் லோடு ஆட்டோ மூலம் கடத்தி வந்து சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடி அசோக்நகரில் உள்ள மைக்கேல் ரத்தினம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பெட்டிகளில் பான்மசாலாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதனை சென்னையில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடியில் பதுக்கி வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது. அங்கிருந்த 2 ஆயிரம் கிலோ பான்மசாலாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தூத்துக்குடி &தருவைகுளம் ரோட்டில் உள்ள மாநகராட்சி குப்பை மேட்டில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதற்கிடையே அதிகாரிகள் அசோக்நகர் பகுதியில் வந்த பால் டிரக்கரை மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் தூத்துக்குடியில் விநியோகிக்க உரிமம் பெறாத நிறுவனத்தின் பால்பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டதும், அவற்றிற்கு முறையாக தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடபடாமலும் தயாரிக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். இதனை கொண்டு வந்த டிரக்கர் டிரைவர் மற்றும் அந்நிறுவன பிரதிநிதி ஆகியோரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அந்த பால் பாக்கெட்டுகளை திருப்பி அனுப்பினர்.

No comments:

Post a Comment